தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு மே மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப்போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை அரசியல் கட்சியினர், சமூகச் செயல்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்தும் தூத்துக்குடிக்குச் சென்று மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார்.அந்தச் சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்தால் எந்த முதலீடும் வராது. இப்படித்தான் தமிழகம் வறுமையில் இருக்கும். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாகிவிடும்” என்றும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு “சமூக விரோதிகளே காரணம்” என்றும் கூறினார். ரஜினியின் இந்தக் கருத்து பலத்த விமர்சனங்களைப் பெற்றது.
இதனை அடுத்து, தூத்துக்குடி போராட்டத்தின்போது வெடித்த வன்முறை தொடர்பாகவும், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணை தொடர்பாக,அவர் குறிப்பிட்ட சமூக விரோதிகள் யார் என்பது குறித்து விளக்கம் தர நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25 ஆம் தேதியன்று அவர் ஆணையத்தில் ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பதாக ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேரடியாக தூத்துக்குடியில் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்க, தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளை எழுத்து வடிவில் சமர்பிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஜினி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதனால் தொடை நடுங்கி ரஜினி எனும் குறிச்சொல்லை உருவாக்கி சமூகவலைதளங்களில் அவருக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இன்று காலையில், தூத்துக்குடியில் ரஜினியை நீங்கள் யார்? எனக் கேட்ட சந்தோஷ் என்பவரை பைக் திருட்டு விசயத்தில் காவல்துறை கைது செய்தது என்கிற செய்தியைத் தொடர்ந்து நான் தான்பா பைக் திருடன் என்கிற குறிச்சொல்லை உருவாக்கினர் ரஜினி ரசிகர்கள்.
அதில் ரஜினியை யார் எனக் கேட்டு அவமானப்படுத்திய சந்தோஷ் ஒரு திருடன் என்று சந்தோசமாகப் பகிர்ந்து வந்தனர்.
அந்த சந்தோசம் சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. அதற்குள் ரஜினி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பற்றிய செய்தி வெளியானதும் தொடை நடுங்கி ரஜினி முன்னிலை பெற்றுவிட்டது. இதனால் ரஜினி மற்றும் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.