4 ஆவது போட்டியில் இந்தியா வெற்றி பெற 3 தடைகள்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மட்டைப்பந்து அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது இந்திய அணி.

அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12.30 தொடங்கவிருக்கிறது.

ஆக்லாந்தில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி ஹாமில்டனில் நடந்த முந்தைய ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பு வரை சென்று தப்பியது. நியூசிலாந்துக்குக் கடைசி 5 பந்தில் 3 ரன் மட்டுமே தேவையாக இருந்த நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆட்டத்தை சமனுக்குக் கொண்டு வந்தார்.

இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் ரோகித் சர்மாவின் இரண்டு சிக்சரின் மூலம் இந்தியா வெற்றிக்கனியைப் பறித்தது.

இதனால் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கும் இந்திய அணி ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்கவேண்டுன் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

ஆனால் இன்று போட்டி நடைபெறும் வெலிங்டன் மைதானம் நியூசிலாந்துக்கு மிகவும் ராசியானது. இங்கு அவர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் 11 ஆட்டங்களில் விளையாடி 8 இல் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதில் தொடர்ச்சியாக 6 வெற்றி பெற்றதும் அடங்கும். இந்திய அணி இங்கு நியூசிலாந்துக்கு எதிராக 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் (2009 மற்றும் 2019 ஆம் ஆண்டு) தோற்று இருக்கிறது. அதனால் நியூசிலாந்து வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

இந்த மைதானத்தில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது, ஒரு அணியின் அதிகபட்சமாகும். கடைசியாக நடந்த 3 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. எனவே ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த அம்சங்களால் இன்று இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.

Leave a Response