தமிழில் குடமுழுக்கு வேண்டி தஞ்சையில் மாநாடு – விவரங்கள் மற்றும் தீர்மானங்கள்

தஞ்சைப் பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் வரும் சனவரி 28 ஆம் நாளுக்குள்
தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டுமென்றும், அவ்வாறு அறிவிக்கவில்லையெனில் மிகக் கடுமையாகப் போராடுவோம் என்றும் தஞ்சையில் நடைபெற்ற தமிழ்க் குடமுழுக்கு கோரும் மாநாட்டில்
பெ.மணியரசன் தெரிவித்தார்.

தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வரும் 05.02.2020 அன்று திருக்குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில்,
அதைத் தமிழிலேயே நடத்த வேண்டுமென தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு கோரி வருகிறது. இதன் வெளிப்பாடாக 22.01.2020 அன்று தஞ்சையில் மிகப்பெரும் மாநாட்டை தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு முன்னெடுத்தது.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள காவேரி திருமண அரங்கில் நடைபெற்ற இம்மாநாட்டின் காலை அமர்வுக்கு, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுத் தலைவர் ஐயனாபுரம் சி.முருகேசன்
தலைமை தாங்கினார்.

தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுப் பொருளாளர் பழ.இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

களிமேடு அப்பர் பேரவையினரின் திருமுறைப் பாடல்களோடு மாநாடு தொடங்கியது.

முன்னதாக, இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த சித்தர் வழி ஆன்மிகச் செயல்பாட்டாளர்கள் செந்தமிழால் வேள்வி நடத்த முடியும் என மாநாட்டில் அதை அரங்கேற்றிக் காட்டினார்கள்.

தஞ்சைப் பெரிய கோயிலிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு வந்த சத்தியபாமா அறக்கட்டளை சித்தர்கள் மாநாட்டுத் திடலை வந்தடைந்தனர். அவர்களை மாநாட்டுத் திடலில் பெ.மணியரசன் வரவேற்றார்.

தமிழ் வழிபாட்டுரிமை குறித்தும், தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு 2005 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்து வரும் செயல்பாடுகளை விளக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்த ஒளிப்படக்காட்சியை, ஆவடி – தமிழ்ச் சைவப் பேரவைத் தலைவர் திருவாட்டி.கலையரசி நடராசன் திறந்து வைத்தார்.

தமிழினத்தின் தொன்மையையும், ஆன்மிகத்தையும் விளக்கும் வகையில் “சித்தர் கூடம்” அமைப்பினர் வைத்திருந்த கண்காட்சியை பெ.மணியரசன் திறந்து வைத்தார். ஏராளமானோர் அதனைப் பார்வையிட்டதுடன், தங்கள் கைப்பேசிகளில் படமெடுத்துக் கொண்டனர்.

முதல் அமர்வாக – “தமிழும் தமிழர் ஆன்மிகமும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மேலைச்சிவபுரி கலை அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் தா.மணி தலைமை தாங்கினார்.
காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த.மணிமொழியன், ஊடகவியலாளர் ம.சாமிநாதன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.விடுதலைச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேனாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி. சாமிநாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தவத்திரு. மூங்கிலடியார் த.பொன்னுசாமி அடிகளார்,குடந்தை தவத்திரு.இறைநெறி இமயவன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

கருத்தரங்கிற்குப் பின் நடைபெற்ற, பெண்ணாடம் திருவள்ளுவர் தப்பாட்டக் குழுவினரின் எழுச்சிப் பறை இசை, பார்வையாளர்களை அதிர வைத்தது. சத்தியபாமா கல்வி அறக்கட்டளை மாணவியரின் தமிழிசை நாட்டிய நிகழ்ச்சி தமிழர்தம் கலைத்திறனைப் பறைசாற்றியது.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாம் கருத்தரங்கிற்கு, பேராசிரியர் வி.பாரி தலைமை தாங்கினார்.
பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் தை.செயபால் (திருத்துறைப்பூண்டி),வே.க.இலக்குவன் (திருச்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“தமிழ்க் குடமுழுக்கு – ஆகமம் – சட்டம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இரண்டாம் கருத்தரங்கில்,
செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார், சென்னை உயர் நீதிமன்ற
மூத்த வழக்கறிஞர் ச.செந்தில்நாதன், சத்திய பாமா அறக்கட்டளை நிறுவனர் தவத்திரு மருத்துவர் சத்திய பாமா , நாம் தமிழர் கட்சி தஞ்சை கிழக்கு மாவட்டச் செயலாளர் ந.கிருஷ்ணகுமார் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தீர்மானங்கள்:-

தமிழர் ஆன்மிகச் செயல்பாட்டாளர்களும், தமிழின உணர்வாளர்களும் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இம்மாநாட்டில், தமிழ்நாடு அரசு தஞ்சைப் பெரிய கோயிலுக்கு திருக்குடமுழுக்கு நடத்தவுள்ளதை வரவேற்கிறோம் என்றும், அதைத் தமிழ் வழியிலேயே நடத்த வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட 88 திருக்கோயில்களுக்கு பாபாஜி பான்ஸ்லே என்ற மராட்டியரை “பரம்பரை அறங்காவலர்” என வைத்துள்ளதைக் கண்டித்தும், அவரை நீக்கிவிட்டு அக்கோயில்களை தமிழ்நாடு அரசே அறநிலையத்துறை வழியே நிர்வகிக்க வேண்டும், தமிழ்நாடெங்கும் சமற்கிருதமயமாக்கப்பட்ட இறைவன் – இறைவிப் பெயர்களையும், ஆன்மிக ஊர்ப் பெயர்களையும் பழையபடி தமிழில் மாற்றம் செய்ய வேண்டும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும், பணியில் அமர்த்தப்படும் வரை அவர்களுக்கு வாழ்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்களும் மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களை மகளிர் ஆயம் துணைப் பொதுச்செயலாளர் திருமதி.க.செம்மலர்ச் செல்வி,
செ.தென்னரசு (சித்தர் கூடம் அறக்கட்டளை),அல்லூர் கரிகாலன், வெள்ளாம் பெரம்பூர் து.இரமேசு, தமிழ்த்தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் பி.தென்னவன் ஆகியோர் முன்மொழிந்தனர்.

மாநாட்டின் நிறைவரங்கிற்கு, தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன் தலைமை தாங்கினார். த.தே.மு. திருவாரூர் மாவட்டச் செயலாளர் ச.கலைச்செல்வம் முன்னிலை வகித்துப் பேசினார்.அ.ம.மு.க. தலைமைக்கழக வழக்கறிஞர் அ.நல்லதுரை, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன்,வீரத்தமிழர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் துரை.செந்தில்நாதன்,
இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் சித்தர் பூத கணநாதர், கரூர் வழக்கறிஞர்
தமிழ் இராசேந்திரன்,பொறியாளர் ஜோ. ஜான் கென்னடி, தமிழின உணர்வாளர் கார்த்திக் பாலா ஆகியோர் உரையாற்றினர்.

மாநாட்டின் நிறைவாக, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்
நிறைவுரை நிகழ்த்தினார்.

தஞ்சைப் பெரிய கோயிலுக்கு தமிழில்தான் திருக்குடமுழுக்கு நடத்த வேண்டுமெனக் கூறிய
பெ.மணியரசன், வரும் சனவரி 28 ஆம் நாளுக்குள் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு நல்ல முடிவெடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு அறிவிக்கவில்லையெனில் ஆன்மிகவாதிகளையும், தமிழின உணர்வாளர்களையும் திரட்டிப் போராடுவோம் என்றும் அறிவித்தார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை நன்றி கூறினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் இரத்தினவேலவன்,
தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம.பா.சின்னதுரை, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன், மகளிர் ஆயம் தலைவர் ம.இலட்சுமி அம்மாள்,
ஆசீவகம் – சமய நடுவம் சுடர் ஒளி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும்
நிகழ்வில் திரளாகப் பங்கேற்றனர்.

– ச.கலைச்செல்வம்

Leave a Response