ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை எல்லா துறையிலும் வீழ்த்தி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 340 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிகார் தவான் 96(90) ரன்களும், கே. எல். ராகுல் 80(52) ரன்களும், கேப்டன் விராட் கோலி 78(76) ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டிவன் ஸ்மித் 98(102) ரன்களும், லபுஸ்சேன் 46(47) ரன்களும் எடுத்தனர்.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக, முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், ஜடேஜா, சைனி, குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது.