பேரறிவாளனை விடுதலை செய்ய சத்யராஜ் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் மனு

ராஜீவ்காந்தி வழக்கில் 29 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளனை மனித நேய அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக ஆளுநருக்கு சிவில் சமூகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 161-இன் கீழ் தமிழக ஆளுநர் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென ஆளுநருக்கு அனுப்பிய மனுவில் கோரப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் தவறாகப் பதிவு செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது, பேரறிவாளனின் உடல்நிலை, அவரது பெற்றோரின் முதுமை மற்றும் உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மனித நேய அடிப்படையில் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் நீதிபதிகள் அக்பர் அலி, கலையரசன், சண்முகம், அரி பரந்தாமன், சிவசுப்ரமணியன், இராஜ இளங்கோ, மனித உரிமை ஆர்வலர்கள் ஆனந்த் தெல்தும்டே, பினாயக் சென், அருணா ராய், பிராசாந்த் பூஷன், ராம் புன்யானி, திரை ஆளுமைகள் வெற்றிமாறன், மிஷ்கின், சத்யராஜ், ராம், ஆண்ட்ரியா, சித்தார்த், சமுத்திரகனி உட்பட இந்தியாவெங்கிலும் உள்ள முன்னாள் நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், திரைத் துறையினர் என பல தரப்பினரும் கையெழுத்திட்டு அளித்துள்ளனர்.

பேரறிவாளனின் தந்தை உடல்நலம் குன்றியதை அடுத்து, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பேரறிவாளனுக்கும் அதே மருத்துவமனையில் உடல்நலப் பரிசோதனைகள் நடந்தன. இச்சூழலில் இந்த மனு முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Response