15.5 ஓவரில் இலங்கையைத் துரத்திய இந்தியா – தொடரையும் கைப்பற்றியது

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்றிரவு நடந்தது.

இதில்,‘டாஸ்’ வென்ற இலங்கை அணித்தலைவர் மலிங்கா,முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். 2 ஆவது ஓவரில் கடினமான கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த தவான் அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி துரிதமான ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். லோகேஷ் ராகுலும் இலங்கை பந்து வீச்சை நொறுக்கினார். மேத்யூஸ் ஓவரில் 2 பவுண்டரி விளாசிய ராகுல், தனஞ்ஜெயா டி சில்வாவின் பந்து வீச்சில் சிக்சர் பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது. ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் இந்தியா 63 ரன்களை திரட்டியது.

இந்திய அணிக்கு வலுவான அஸ்திவாரம் அமைத்துத் தந்த இந்தக் கூட்டணியை சுழற்பந்து வீச்சாளர் சன்டகன் உடைத்தார். அணியின் ஸ்கோர் 97 ரன்களாக (10.5 ஓவர்) உயர்ந்த போது தவான் 52 ரன்களில் (36 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

2 ஆவது விக்கெட்டுக்கு இறங்கிய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் சந்தித்த முதல் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார். ஆனால் ரன்ரேட்டை தளரவிடக்கூடாது என்ற நோக்கில் ஆடிய சாம்சன் (6 ரன்) ஹசரங்காவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்த ஓவரில் லோகேஷ் ராகுல் (54 ரன், 36 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் (4 ரன்) சன்டகனின் சுழலில் சிக்கினர். 25 ரன் இடைவெளியில் 4 விக்கெட் சரிந்ததால் இந்தியா லேசான தடுமாற்றத்திற்கு உள்ளானது.

வழக்கத்துக்கு மாறாக 6 ஆவது வரிசையில் களம் புகுந்த விராட் கோலி நெருக்கடியைத் தணித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். மேத்யூஸ் ஓவரில் சிக்சர், பவுண்டரி ஓடவிட்டு உற்சாகப்படுத்திய கோலி (26 ரன், 17 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) தேவையில்லாமல் 2 ஆவது ரன்னுக்கு ஓடி ரன்-அவுட்டில் வீழ்ந்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் டக்-அவுட் ஆனார்.

இதைத் தொடர்ந்து மனிஷ் பாண்டேவும், ஷர்துல் தாகூரும் கைகோர்த்து கடைசி 2 ஓவர்களில் இலங்கை பந்து வீச்சை தெறிக்க விட்டனர். ஆச்சரியப்படும் வகையில் ஷர்துல் தாகூர், எதிரணி கேப்டன் மலிங்கா, குமாரா ஓவர்களில் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு மிரள வைத்தார். இறுதி 2 ஓவர்களில் அவர்கள் திரட்டிய 34 ரன்களின் பலனாக இந்தியா 200 ரன்களை தாண்டியது.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஷர்துல் தாகூர் 22 ரன்களுடனும் (8 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), மனிஷ் பாண்டே 31 ரன்களுடனும் (18 பந்து, 4 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

அடுத்து 202 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி இந்திய பந்து வீச்சில் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் குணதிலகா (1 ரன்), அவிஷ்கா பெர்னாண்டோ (9 ரன்) மற்றும் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா (7 ரன்) ஆகியோர் இந்தியாவின் வேகத்தில் பணிந்தனர். இந்த வீழ்ச்சியில் இருந்து இலங்கை அணியால் மீள முடியவில்லை.

மிடில் வரிசையில் மேத்யூசும் (3 சிக்சருடன் 31 ரன்), தனஞ்ஜெயா டி சில்வாவும் (57 ரன், 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) இணைந்து தங்கள் அணியை 100 ரன்களை கடக்க வைத்தது மட்டுமே அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் ஆகும். அவர்களைத் தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை.

முடிவில் இலங்கை அணி 15.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டம் மழையால் ரத்தான நிலையில் இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்திலும் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் இ்ந்தத் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

22 ரன் மற்றும் 2 விக்கெட் என்று ஆல்-ரவுண்டராக ஜொலித்த இந்திய வீரர் ஷர்துல் தாகூர் ஆட்டநாயகன் விருதையும், வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

Leave a Response