பயமாக இருந்தது – கமல் வெளிப்படை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கிராமசபை விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி சங்கம் விடுதியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிற்பகல் 1.30 மணிக்கு வருகை தந்தார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது….

தடம் புரளாமல் நடக்க வேண்டும் என்பதனால் சற்று யோசித்து, செவ்வனே செய்ய வேண்டும் என்பதனால் இந்தத் தாமதம் நடந்திருக்கிறது. இனி யாரும் தாமதிக்கலாகாது. இந்த வேகம் 2021 வரை மட்டுமல்ல, அதையும் தாண்டி இருந்தாக வேண்டும்.

என் சினிமாவை பார்ப்பதற்கு ரூ.1000, ரூ. 2000 என்று யோசிக்காமல் வருடக் கணக்கில் செலவு செய்தவர்கள் நீங்கள். அது ஒரு தனி நடிகனைக் காப்பாற்ற, பாராட்ட நீங்கள் செய்தது. இப்போது நான் காப்பாற்ற நினைப்பது தமிழகத்தை.

நம் வாழ்வாதாரமாக இருக்கும் தமிழகத்திற்கு நாம் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் முதலீட்டாளர்கள். நான் எனக்குக் கேட்கவில்லை என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் நீதி மய்யம் தமிழகத்தை நீண்ட சொர்க்கமாக மாற்ற வேண்டும் என கனவு கண்டு கொண்டிருக்கிறது.அதை நனவாக்க முடியும். அதற்கான எல்லா சான்றுகளும் இருக்கிறது.

இந்த அரசியல் அரங்கத்தை வெல்வதற்கு யுக்தி என்ன? தந்திரம் என்ன? என்றெல்லாம் கேட்கிறார்கள். காந்தியார் சொன்னதைப்போல, என் எதிரியைவிட பலமானது நேர்மை (ஹானஸ்ட்).

உண்மையை மாற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம் எதிரிகளிடம் இல்லாத ஆயுதம் நம்மிடம் இருக்க வேண்டும். இருக்கிறது, அது தொடர வேண்டும்.

இது சினிமாக்காரனை மட்டும் பார்க்க வரும் கூட்டமாக இல்லாமல், தமிழகத்திற்காக நாம் திட்டங்கள் போடுகிறோம். அதனால், கூடி பேசி நல்லது நடக்க ஏற்பாடு செய்யும் கூட்டம் என தெரிய ஆரம்பித்து விட்டது. வெல்வோம், வெல்வோம்.. நாளை நமதே என்று சொல்வது முக்கியம்தான். அது நமக்குள் சொல்லிக்கொள்ளும் தெம்பு.

நாளை என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டங்கள், கட்டுப்பாடு, கட்டமைப்பு நமக்கு இருக்க வேண்டும். அதற்கான ஆரம்பம்தான் இது. அதைச் செய்யாமல் இருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அறிவார்ந்தவர்களை, அன்பானவர்களை நாம் நாடிச்செல்ல வேண்டும். வருவார்கள் என கடையைத் திறந்து காத்திருக்கக் கூடாது. இது கடையல்ல. கடமை.

இப்போது உங்களையெல்லாம் பார்க்கும்போது என் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. முதலில் பயமாக இருந்தது. உங்களுடன் வந்து சேர்ந்ததும் கண்டிப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கை வீண்போகாது. எல்லோரது மனதிலும் அந்த நம்பிக்கை தொற்றி பிடிக்கும் என நினைக்கிறேன். இது கூட்ட வேண்டிய கூட்டம் அல்ல. கூட வேண்டிய கூட்டம். அடிக்கடி கூடுங்கள். எண்ணிக்கையிலும் கூடுங்கள்.

நாம் நேர்மையாக இருப்போம் என்ற சூளுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். யாரும் தவறு செய்து விடாதீர்கள். அப்படி செய்யும் தவறுகள், அதற்கான தண்டனை என்பதைவிட பலனை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என திண்ணமாக நம்புபவன் நான். நீங்கள் நேர்மையாகச் செயல்படாவிட்டால், அதற்காக நான் கருணை இல்லாமல் சில சமயங்களில் செயல்பட வேண்டியதிருக்கும். அதையும் எதிர்பாருங்கள். காரணம், நான் ஏற்றிருக்கும் பாத்திரத்தை துலக்கும் வேலையும் எனக்கு உண்டு. கொஞ்சம் க‌‌ஷ்டமாகத்தான் இருக்கும். கொஞ்சம் அருவருப்பாகக்கூட இருக்கும். ஆனால், அதைச் செய்தே தீருவேன். பாத்திரம் சுத்தமாக இருப்பது அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response