போராட்டம் தொடரும் ஆதரவளித்த சீமானுக்கு நன்றி – பெ.மணியரசன் கடிதம்

“தமிழர் வேலைகளைப் பறிக்காதீர்! வெளி மாநிலத்தவர்களே திரும்பிப் போங்கள்!” என்ற முழக்கத்துடன் சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையம் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் 20.12.2019 – வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் தலைமையில் தொடங்கிய “மனிதச் சுவர் போராட்டம்” பெருந்திரளானோர் பங்கேற்புடன் மிக எழுச்சியாக நடந்தது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இயக்கத் தோழர்களும், இன உணர்வாளர்களும் பங்கேற்றனர். மும்பையிலிருந்து வந்தும் கலந்து கொண்டனர். நானூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலை 6.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

இப்போராட்டம் தொடர்பாக பெ.மணியரசன் தமிழக மக்களுக்கு விடுத்துள்ள திறந்த மடலில்…..

இந்தப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற உழைத்த – செய்திகளைப் பகிர்ந்து கொண்ட அத்தனை தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் நெஞ்சு நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! அன்று காலை #தமிழகவேலைதமிழருக்கு #TamilnaduJobsForTamils என்று வெளியிடப்பட்ட குறிச்சொல், தமிழ்நாடு அளவில் சுட்டுரையில் முன்னணி முழக்கங்களில் ஒன்றாக பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டது.

குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் முனைவர் சுப. உதயகுமார், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் போன்ற தோழமை இயக்கத் தலைவர்கள் இந்த முழக்கத்தைப் பகிர்ந்தனர்.

இப்போராட்டத்தை 2019 அக்டோபரில் அறிவித்ததிலிருந்து, இச்செய்தியை இணைய தள ஊடகத்தினரும், சமூக வலைத்தள செயல்பாட்டாளர்களும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்த்தனர். வெளியார் ஆக்கிரமிப்பினால் ஏற்படும் பாதிப்புகளை நாடகமாகக் காட்சிப்படுத்தி குறும்படங்களாகவும், எழுச்சிப் பாடல்களாகவும் நம் தோழர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். திருச்சி தோழர் இனியன் திருச்சியில் மட்டுமின்றி, கடலூர், புதுச்சேரி பகுதிகளிலும் மிகச்சிறப்பாக சுவரெழுத்து எழுதி பரப்புரை செய்தார்.

தொலைக்காட்சி ஊடகத்தினரும், அச்சு ஊடகத்தினரும் போராட்ட நாளுக்கு சில நாட்கள் முன்பாக செய்தி வெளியிட்டு, பேருதவி புரிந்தனர். போராட்டம் நடந்தபோதும், ஊடகத்தினர் செய்திகளை வெளியிட்டு, மக்களிடம் கொண்டு சென்றனர்.

இவர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தின் முன் பெருந்திரளாக மனிதச் சுவராக அணிவகுத்து நின்ற ஆண்கள் – பெண்கள் – மாணவர்கள் – இளைஞர்கள் ஆகியோர் எழுப்பிய முழக்கங்களை, தொடர்வண்டிகளிலிருந்து இறங்கி வந்த – தொடர்வண்டிகளுக்குச் செல்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் பார்த்தனர்; கேட்டனர். தொடர் வண்டியிலிருந்து இறங்கி வந்த வெளி மாநிலத்தார் உள்ளிட்ட அனைவரிடமும் பேரியக்கத் தோழர்கள் அமைதியாக துண்டறிக்கை கொடுத்து போராட்டத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறினர். இதில் அக்கறையுள்ள பலர் நின்று, போராட்டத்தை கவனித்துப் பாராட்டிச் சென்றனர்.

தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் – வேலை அனைத்திலும் அயல் மாநிலத்தவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதனால், தமிழர்களின் வாழ்வுரிமை தங்கள் தாயகத்திலேயே பறிக்கப்படுகிறது. தமிழர்களின் தாயகம், மொழி, இனம் ஆகிய உரிமைகள் அரிக்கப்படுகின்றது.

இந்த வெளியார் சிக்கலை நாம் நீண்ட காலமாகப் பேசி வந்தாலும், இதற்காக பல போராட்டங்களை நடத்தி வந்தாலும், அண்மைக் காலமாகத்தான் இதற்கு வெகுமக்கள் ஆதரவு கூடி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் (2019) தொடர்வண்டித்துறையில் சென்னை பெரம்பூர், திருச்சி பொன்மலை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பழகுநர் வேலைக்கு (Act Apprentice) சேர்க்கை நடந்தபோது, 100-க்கு 95 விழுக்காடு வெளி மாநிலத்தவர்களையே சேர்த்தார்கள்; மண்ணின் மக்களாகிய தமிழ்நாட்டு மாணவர்களைப் புறக்கணித்தனர். அந்த நேரத்தில், தமிழர்களுக்கு இன அடிப்படையில் இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து, திருச்சி பொன்மலை தொடர்வண்டி தொழிற்சாலை வாயிலில் 3.05.2019 அன்று உணர்ச்சிமிக்க மறியல் போராட்டம் நடத்தினோம். அது பெருவீச்சைப் பெற்றது!

அன்றைய நாளில் நாம் எழுப்பிய #தமிழகவேலைதமிழருக்கு #TamilnaduJobsForTamils முழக்கம், சுட்டுரையில் அனைத்திந்திய அளவில் முதலிடம் பெற்று பேசு பொருளானது. அப்போராட்டத்தில், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று நாம் வைத்த கோரிக்கையை தி.மு.க.வின் “முரசொலி” இதழ் ஆதரித்து ஆசிரியவுரை தீட்டியது. இக்கோரிக்கையை தி.மு.க. தனது கோரிக்கைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளது.

இப்போராட்டத்தின் வெற்றியாக – அதே மே மாதம் (20.05.2019) சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். புதிதாகப் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டபோது, அதில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்தது. அடுத்து, உதவி நிலைய அதிகாரி போன்ற பணியிடங்களை அண்மையில் நிரப்பியபோது பெரும்பாலும் தமிழர்களுக்கு அதில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அங்கு பணியாற்றும் தமிழர்கள் கூறினார்கள். அடுத்த பெரும் வெற்றியாக, தென்னக மண்டலத்தில் தொடர்வண்டித் துறை வேலைக்கு தென்னக மண்டல மாநிலங்களில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தென்னகத் தொடர்வண்டித் துறை நிபந்தனை விதித்துள்ளது.

எனவே, நாம் போராடப் போராட நமது உரிமைகளை மீட்க முடியும் என்பதற்கான நம்பிக்கையோடு தமிழர் வாழ்வுரிமைப் போராட்டங்களைத் தொடர்வோம்!

ஒத்துழையாமை இயக்கம்
——————————————
தமிழர் உரிமைகளுக்கான சட்டங்களை ஆட்சியாளர்கள் இயற்றச் செய்வது நமது போராட்டத்தின் முதன்மைக் குறிக்கோள்! அதேவேளை, வெளி மாநிலத்தவர்களுக்கு எதிரான தமிழர் தற்காப்பு நடவடிக்கையாக ஒத்துழையாமை செயல்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாகும்! வெளி மாநிலத்தவர்களுக்கு வேலை தருவதில்லை, அவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதில்லை, அவர்களிடம் நிலம் விற்பதில்லை, அவர்களின் நிறுவனங்களில் பொருள்களை வாங்குவதுமில்லை – விற்பதுமில்லை என்ற வன்முறையற்ற அறம் சார்ந்த ஒத்துழையாமை இயக்கத்தை தமிழர்கள் ஒவ்வொருவரும் கடைபிடிக்க உறுதியேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி!

#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response