விராட் கோலி ஏமாற்றினார் – சென்னை ரசிகர்கள் சோகம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று ( டிசம்பர் 15) பகல்-இரவு மோதலாக நடைபெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷெல்டன் காட்ரெல் வீசிய பந்தில் லோகேஷ் ராகுல் 6 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார். மிகுந்த எதிர்பார்ப்புடன் 3 வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி (4 ரன்கள்) காட்ரெல் வீசிய பந்தில் ஸ்லிப்பில் ஆட நினைத்து பந்து பேட்டின் அடிப்பகுதியில் உரசி போல்ட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

ரோகித் சர்மா 36 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் நிதானமாக ஆடி அரைசதத்தைக் கடந்தனர். அதனைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 70 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் (7 பவுண்டரிகள் 1 சிக்ஸர்) 71 ரன்கள் எடுத்த நிலையில் ஹெட்மேயர் வீசிய பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ் 40 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தனது முதல் ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய சிவம் துபே 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது.

பின்னர் 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில், ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

அதில் சுனில் அம்ப்ரிஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷாய் ஹோப்புடன், ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷாய் ஹோப் ஒரு பக்கம் நிதானமாக விளையாட மறுபக்கம் ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஹெட்மையர் 50 பந்திலும், ஷாய் ஹோப் 92 பந்திலும் அரைசதம் அடித்தனர். 50 பந்தில் அரைசதம் அடித்த ஹெட்மையர் 85 பந்தில் சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஹெட்மையரின் 5-வது சதம் இதுவாகும். சதம் அடித்த ஹெட்மையர், 106 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 139 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஷாய் ஹோப் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். 47-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி அடித்து 8-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

ஹெட்மையர், ஷாய் ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 47.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஷாய் ஹோப் 102 ரன்னுடனும், பூரன் 29 ரன்னுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அதிரடியாக ரன் சேர்த்த ஹெட்மையர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து பல வெற்றிகளைக் குவித்து வந்தாலும் சென்னையில் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் சோகமாக வெளியேறினர்.

இரண்டாவது போட்டி வரும் 18ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது.

Leave a Response