இந்தியா வங்க தேச மட்டைப்பந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஐந்துநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியைக் காண வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு பெங்கால் கிரிக்கெட் வாரியம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் ஷேக் ஹசினா அந்த அழைப்பை ஏற்று போட்டியைக் காண ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து கங்குலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைக் காண வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை ஏற்று போட்டியைக் காண வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 21 ஆம் தேதி அவர் கொல்கத்தா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கொல்கத்தா வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்தப் போட்டியைக் காண வருமாறு பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுப்பேன் என தெரிவித்தார்.
எல்லாம் சரியாக நடந்தால், இருநாட்டு பிரதமர்கள் மற்றும் மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி மூவரும் ஈடன் கார்டனில் கிரிக்கெட்டைப் பார்ப்பார்கள் என மற்றொரு அதிகாரி கூறினார்.
இந்தியா – வங்கதேசம் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்க உள்ள 2 ஆவது ஐந்துநாள் போட்டி, இந்தியாவில் முதல் முறையாக பகல்/இரவு போட்டியாக நடக்க உள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போட்டியின்போது நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி சிறப்பு வர்ணனையாளராகச் செயல்பட உள்ளார். முன்னாள் இந்திய அணித்தலைவர்கள் பலரும் அவருடன் இணைந்து வர்ணனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.