
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதியில் நேற்று பரப்புரை செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
மக்களுக்கான திட்டங்களை அதிமுக அரசு தான் நிறைவேற்றியது. மக்களின் தேவைகளை அறிந்து அதிமுக அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
என்ன பேச வேண்டும் என்றே தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகிறார். மக்களின் குறைகளைக் கேட்க திண்ணை பிரச்சாரத்தில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோல திண்ணையில் அமர்ந்து மனு வாங்கியிருந்தால் அவர் நல்ல தலைவர் என்று ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசி வருவது வேடிக்கையானது.திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டு தான் ஜெயலலிதா மரணமடைந்தார்.
ஜெயலலிதாவை வசைபாடிய ப.சிதம்பரம் உள்ளிட்டோரை அவரது ஆன்மா பழிவாங்கியுள்ளது. அதனால்தான் அவர் சிறையில் இருக்கிறார். தொடர்ந்து பொய் பரப்புரை செய்து வரும் ஸ்டாலின் உள்ளிட்டோரையும் ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது
இவ்வாறு அவர் பேசினார்.
