
சுயம்புலிங்கம் (கமல்) ஒரு சாமானியர். அவருக்கு இரண்டு கண்களாக விளங்குவது குடும்பம் மற்றும் தொழில். சிறு வயதில் தாய் தந்தையரை இழந்த சுயம்புலிங்கம் பெயரைப் போலவே தன்னை செதுக்கிக்கொண்டவர். அன்பு மனைவி ராணி (கவுதமி) மற்றும் இரண்டு மகள்களுடன் செல்வி (நிவேதா) மீனா (எஸ்தர்) அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். சுயம்புலிங்கத்தின் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே சினிமாதான். அந்த ஊரின் கம்பிவட தொலைக்காட்சி (கேபிள் டிவி) உரிமையாளரான சுயம்புவின் முழு நேர வேலை படம் பார்ப்பதுதான். அது பாசமலராகட்டும், பனிரெண்டு மணிக்கு மேல் காண்பிக்கப்படும் ஏடாகூடமான படங்களாகட்டும் சினிமா தான் அவரது உயிர் மூச்சு. கேபிள் அலுவலகமே கதி என்று இருக்கும்போது திடீரென்று வீட்டு நினைவை வரவழைப்பதும் திரைப்பட காதல் காட்சியொன்றுதான். அந்த அளவுக்கு சினிமா அவருக்குள் கலந்திருக்கும் ஒன்று.
ஊர் என்று இருந்தால் தேநீர்க்கடை இருக்கும். அரசியல் முதல் சினிமாவரை அலசிக் காயப்போடும் அந்தக்கடைக்கு தினமும் செல்லும் வழக்கமுடையவர் சுயம்பு. கடை முதலாளி பாய் (எம்.எஸ்,பாஸ்கர்) சுயம்பு இருவருக்குமிடையே விளக்கப்படாத ஒரு நட்பு இழைந்தோடும். கடைக்கு எதிரேயுள்ள காவல்நிலையத்தில் காவலருக்கு (கலாபவன் மணி). நேர்மையாக வாழும் சுயம்புவிற்கு சிறிய வியாபாரிகளிடம் பணம் பறிக்கும் கலாபவன்மணி மீது நியாயமான கோபம். ஆனால் அதை நேரிடியாகக் காண்பிக்காமல் நையாண்டிப்பேச்சின் மூலம் வெளிப்படுத்துவான். இதனால் எரிச்சல் அடையும் கலாபவன்மணி சுயம்புவைப் பழிவாங்க சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறான்.
ஆர்ப்பாட்டம் இல்லாத அந்தக் குடும்பத்தில் மூத்த மகள் செல்வி் பள்ளி இயற்கை சுற்றுலா கிளம்பிச் செல்ல,பிரச்னை அங்கு ஆரம்பமாகிறது. அவளை அங்கு பார்க்கும் பணக்கார மாணவன் வருண் அவளுக்கே தெரியாமல் அவள் குளிப்பதை படமெடுத்துவிடுகிறான். அடுத்த நாள் அதை அவளிடம் காண்பித்து மிரட்டி வரவழைக்க அவன் செய்யும் முயற்சியில் அவனே சிக்கி கொலையாகிறான். இந்தச் சம்பவங்களின் பின்னனியில் கதையை இழை இழையாக பின்னியிருக்கிறார்கள். தன்னுடைய குடும்பத்திற்கு சிறு பாதிப்புக் கூட நேரக் கூடாது என்று துடிக்கும் சுயம்புவின் ஒவ்வொரு அசைவும் ஆயிரம் கதைகள் சொல்கின்றன.
ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகவும் விறுவிறுப்பாக மலையாள மூலம் த்ரிஷ்யம் படத்திற்கு நிகராக சில சமயங்களில் அதைவிடவும் நேர்த்தியாக படம் எடுத்துள்ளார்கள். ஐஜி கீதா பிரபாகர் (ஆஷா சரத்) மற்றும் அவரது கணவர் ஐஏஎஸ் அதிகாரி பிரபாகர் (அனந்த் மகாதேவன்) இருவரின் நடிப்பும் படத்திற்கு பக்கபலம். அதுவும் மகனை இழந்து தவிக்கும் ஒரு தாயாக அதைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் அதிகாரியாக இரண்டு வகையிலும் நடிப்பில் அசத்தியுள்ளார் ஆஷா சரத். கலாபவன் மணி சுயம்புவின் இளைய மகளை அடித்து மிதித்து உண்மையை வரவழைக்கும் காட்சியில் தியேட்டரே அதிர்ந்து கலங்கும் அளவிற்கு நடிப்பில் மிரட்டிவிட்டார். இளவரசு, அருள்தாஸ், டெல்லி கணேஷ், சாந்தி வில்லியம்ஸ் போன்ற துணைப்பாத்திரங்கள் கதைக்கும் தங்கள் பங்களிப்பை கச்சிதமாக செய்துள்ளனர்.
கஞ்சத்தனமும், கறார்த்தனமுமாக ஒரு நடுத்தர அப்பாவி கிராமத்தானாக கமல், குடும்பத்துக்காகப் போராடும் ஒருவராக, தான் பார்த்தப் படங்களிலிருந்து சூழலுக்குத் தேவையான விஷயங்களை கிரகித்து, தன் மூளையையும் அனுபவத்தையும் பயன்படுத்தி இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் புத்திசாலியாக, உணர்வுரீதியாக திரையில் வென்றுவிடுகிறார்.
உலகம் முழுவதும் நடந்து கொண்டேயிருக்கும் ஒரு விஷயம் நல்லவைக்கு அல்லாதவைக்கும் இடையே நிகழும் துவந்தம். மகாபாரதம், ராமாயணக் கதைகளிலிருந்து தற்காலம் வரை நடக்கும் சமர்களுக்கான காரணம் நல்லவன் கெட்டவன், கடவுள் சாத்தான் கருத்தியல் இதற்கிடையே நிகழும் போராட்டங்கள் தான். மனித மனத்துக்குள கடவுளும் இருக்கிறான, சாத்தானும் உள்ளான். திட்டமிட்டுச் செய்யப்படவில்லை எனிலும் அது உயிர் பறித்தல், கொலையையே செய்துவிட்டு மறைக்கும் ஒரு குடும்பத்தின் மீது நிச்சயம் யாருக்கும் கோபம் வரும். ஆனால் அதன் காரணம், பின்னனி தெரிகின்ற போது அவர்கள் பிடிபட்டுவிடக்கூடாது என்று தான் நினைக்கிறோம். பிரார்த்திக்கிறோம்.
பாபநாசம் க்ளைமேக்ஸ் காட்சிகள் தமிழுக்காக சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கண்கள் மட்டுமல்ல,உடல் மட்டுமல்ல கமலின் ஒவ்வொரு அங்கமும் குற்றவுணர்விலும் துயரத்திலும் மிகையற்ற நடிப்பை காண்பிக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமை சகாப்தம் ஆகச் சிறந்த கலைஞன் கமல் என்றால் இதில் ஒரு சொல் கூட பொய்யில்லை. அவரது அற்புதமான நடிப்பிற்கு மற்றொரு உதாரணம் போலீஸ் அவர்கள் வீட்டில் குழி தோண்டிக்கொண்டிருக்க அனைவரும் பதற்றத்தின் உச்சியில் இருக்க கமல் மட்டும் சின்னதாக ஒரு கெத்துடன் இருப்பார். உண்மை தெரிந்ததும் அவர் முகத்தில் தென்படும் மிக மிகச் சிறிய புன்னகை.
படத்தின் முக்கியமான மற்றொரு அம்சம் இதில் பிரச்சார நெடி துளியும் இல்லை. நினைத்திருந்தால் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி ஆபத்தானது என்பதில் தொடங்கி இயற்கை விவசாயம், குழந்தைகள் வளர்ப்பு என பல விஷயங்களை விலாவரியாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் மையக் கருவிலிருந்து இம்மி பிசகாமல் கதையை நேர்க்கோட்டில் சொல்லியிருப்பது சிறப்பு. மூன்றுமணி நேரப்படம் என்பதை ஒரு நொடியும் உணர வைக்காமல் தொய்வின்றி எழுதப்பட்ட திரைக்கதை இதை சாத்தியப்படுத்தியுள்ளது.
நா.முத்துக்குமார் பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளர் கிப்ரான். மழை ஒரு கதாபாத்திரம் என்று சொல்லும் அளவிற்கு வலுவாகக் காட்சிப்படுத்தப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவன். குக்கிராமத்தை ஆகட்டும் குழந்தைகளின் பயம் கலந்த உடல்மொழியை, கண்களை என நுணுக்கமாக அதே சமயம் உறுத்தலில்லாமல் கதையின் நகர்வை பதிவு செய்துள்ளார். மலையாளத்தில் த்ருஷ்யம் படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் தான் தமிழிலும் இயக்கியுள்ளார். அவருக்கு பக்கபலமாக மலையாள தமிழ் இருமொழிகளில் விற்பன்னரான எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். கமலுக்கு நெல்லைத் தழிழைப் பயிற்றுவித்திருப்பவர் எழுத்தாளர் / இயக்குநர் சுகா. மண்டையிடிக்கி…ஏளா என்று சின்ன வார்த்தைகளில் கூட அசல் நெல்லைத் தமிழை திரையில் பேச வைத்ததற்கு நிச்சயம் பாராட்டவேண்டும்.


