மோடிக்கு எதிராகத் திரளும் தெலுங்கானா – தமிழக அரசு கவனிக்குமா?

ஆந்திராவின் அடையாளங்களில் ஒன்று நல்லமல்லா காடுகள்.ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்நூல், மகபூப்நகர், குண்டூர்,பிரகாசம் மற்றும் கடப்பா மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது இந்த மலை.

நல்லமல்லா காட்டுப் பகுதிகளில் யுரேனியம் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.

இந்தத் திட்டம் வந்தால் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படுவதுடன் 600 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். அதோடு மலையில் இருந்து யுரேனியம் எடுக்கப்படுவதால், நீர் வளம் அழிந்து விடும்.

இதனால், ட்விட்டரில் SAVE NALLAMALLA என்கிற குறிச்சொல் பிரபலமானது.அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, பவன் கல்யாண் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

யுரேனியத்தை விலை கொடுத்து வாங்கலாம், காடுகளை வாங்க முடியுமா என காட்டமாகக் கேள்வி எழுப்பி உள்ள அவர், குளங்கள் ஏரிகளை அழித்ததால் வெள்ளப்பெருக்கு எற்படுவதாகவும், காடுகளை அழிப்பதால் குடிநீர் மாசு ஏற்படுவதாகவும் விஜய்தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்ப்புகளீன் விளைவாக, தெலுங்கானா மாநிலத்திலுள்ள நல்லமல்லா காடுகளில் அமரபட் புலிகள் சரணாலயப் பகுதியில் யுரேனியம் சுரங்கம் அமைப்பதற்கு மட்டுமல்ல அதற்குரிய ஆய்வுகளைக் கூட அனுமதிக்கமாட்டோம் என்று அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ். இரு தினங்களுக்கு முன்னர் இதைச் சட்டமன்றத்தில் அமைச்சர் ராம ராவ் அறிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்து தெரிவித்த கேசியார், யுரேனிய சுரங்கத்திற்கு எதிராக பொருத்தமான தீர்மானம் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்தத் திட்டத்தை அனுமதித்தால் ஹைதராபாத் நகரத்திற்கு குடிநீர் வழங்கக்கூடிய கிருஷ்ணா நதி முழுவதும் மாசடைந்து விடும் அதனால் கடந்த 2014 ஆண்டிலிருந்து யுரேனிய சுரங்கங்கள் தொடர்பாக எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்த முடிவு தீர்க்கமான முடிவென்றும் எந்த இடர்வந்தாலும், எந்தமாதிரியான விளைவுகள் ஏற்பட்டாலும், நாங்கள் ஒருபோதும் இந்தத் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தவர், மக்கள் இதுகுறித்து எந்த கவலையும் கொள்ளத்தேவையில்லை என்றார்.

மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டுவரத் தீர்மானித்தால் எல்லோரும் இணைந்து இந்தத் திட்டத்தை எதிர்க்கப்போவதாகவும், இது குறித்து காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் பட்டி விக்ரமார்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஏகமனதாக ஆதரித்து நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பப்போவதாகத் தெரிவித்துள்ளார். காங்கிரசுக் கட்சியும் இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்களை அதிகமாக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிரான முடிவுகளை எடுக்கும் போது தமிழக அரசு மட்டும் மேலும் மேலும் அணுவுலைகளை அனுமதிப்பது எவ்வளவு மக்கள்விரோதச் செயல் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

Leave a Response