கர்நாடகத்தில் பதவிச் சண்டை – அமித்ஷா படத்தை எரித்த பாஜகவினர்

கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் – காங்கிரசு ஆகிய கட்சிகளின் கூட்டணி அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 26 ஆம் தேதி பாஜக ஆட்சி அமைத்தது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.

இவரது தலைமையில் ஆட்சி அமைந்து 27 நாட்கள் கடந்துள்ள நிலையில், கடந்த 20 ஆம் தேதி முதல்கட்ட அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது.

அப்போது, மூத்த தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஆர்.அசோக், கே.எஸ்.ஈஸ்வரப்பா, கோவிந்த கரஜோள், லட்சுமண்சவதி, பி.ஸ்ரீராமுலு, எஸ்.சுரேஷ்குமார், வி.சோமண்ணா, சி.டி.ரவி, பசவராஜ் பொம்மை, அஸ்வத் நாராயண், கோட்டா சீனிவாச பூஜாரி, ஜே.சி.மாதுசாமி, சி.சி.பாட்டீல், எச்.நாகேஷ், பிரபு சவுஹான் மற்றும் சசிகலா ஜொல்லே அன்னசாஹேப் ஆகிய 17 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

ஒரு வாரத்திற்குப் பின் நேற்று முன்தினம் ஆளுநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கோவிந்தகார்ஜோள், அஸ்வத் நாராயண், லட்சுமண்சவதி ஆகிய மூன்று பேரை துணை முதல்வர்களாக நியமனம் செய்துள்ளதாக அறிவித்தார்.

மேலும், புதிய அமைச்சர்களுக்கான துறைகளையும் அறிவித்தார்.

இதனால் பாஜகவினரிடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.

துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று மூத்த அமைச்சர்களான கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆர்.அசோக், பி.ஸ்ரீராமுலு ஆகியோர் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு சாதாரண துறைகள் ஒதுக்கப்பட்டு, புதியவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேலும், இவர்களால் முக்கிய துறை ஒதுக்காமல் புறக்கப்பட்டுள்ளதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள முதல்வர் எடியூரப்பா வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்ற அமைச்சர் பி.ஸ்ரீராமுலு, தனக்கு துணை முதல்வர் பதவி வழங்காததற்கு அதிருப்தி வெளிப்படுத்தியதுடன், தனக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை வேண்டாம். வேறு துறை ஒதுக்கீடு செய்ய வேண்டும் அல்லது தற்போது ஒதுக்கியுள்ள துறையுடன் கூடுதலாக வேறு துறை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கர்நாடக மாநில பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்காமல் புறக்கணித்துள்ளதால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஈஸ்வரப்பா தொடங்கி நடத்தி வரும் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு நிர்வாகிகள் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளதுடன், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்த சி.டி.ரவிக்கு சுற்றுலாத் துறை வழங்கியுள்ளதால் கடும் அதிருப்தியில் உள்ள அவர், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் ஆலோசனையில் உள்ளதாக ஆதரவாளர்கள் மூலம் தெரிய வருகிறது.மேலும், அரசு வழங்கிய காரை திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பாஜக ஆட்சியில் துணை முதல்வராக மட்டுமில்லாமல் உள்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஆர்.அசோக், இம்முறையும் துணை முதல்வருடன் உள்துறை ஒதுக்கீடு செய்யும்படி வலியுறுத்தி வந்தார்.அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்காமல் தவிர்த்தது மட்டுமின்றி, அவர் விரும்பிய துறையையும் ஒதுக்கீடு செய்யாமல் வருவாய்த் துறை வழங்கியுள்ளதால் அதிருப்தியில் உள்ளார்.

2008 முதல் 2013 வரை நடந்த பாஜக ஆட்சியில் கடைசி 15 மாதங்கள் முதல்வராகப் பதவி வகித்த ஜெகதீஷ் ஷெட்டர், தற்போதைய ஆட்சியில் துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் விட்டது மட்டுமில்லாமல், அவர் விரும்பிய நகர வளர்ச்சித் துறை வழங்காமல் தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பா திட்டமிட்டே தனக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுக்காமல் தவிர்த்துள்ளதாக ஆதரவாளர்களிடம் அவர் புலம்பி வருகிறார். தனது அதிருப்தியை பாஜ தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்பட பலரிடம் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையில், அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காத சிலர் முதல்வருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். அவர்களைச் சமாளிக்க வேண்டுமானால் 2 ஆம் கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பு நடத்த வேண்டிய கட்டாயம் எடியூரப்பாவுக்கு ஏற்பட்டுள்ளது.

மூத்த சட்டமன்ற உறுப்பினர்களான உமேஷ்கத்தி, ராஜுகவுடா, சிவனகவுடா நாயக், பி.எம்.ரேணுகாச்சார்யா, சோமலிங்கப்பா, எஸ்.ஆர்.விஸ்வநாத், சதீஷ் ரெட்டி உள்பட பலர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது முதல்வருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்து சர்ச்சையில் சிக்கிய மேலவை உறுப்பினர் லட்சுமண் சவதிக்கு துணை முதல்வர் பதவி எப்படி வழங்கலாம்? என்று பாஜக.வினர் கேள்வி எழுப்புகின்றனர்.

அதோடு,பதவி கிடைக்காதர்கள் வெளிப்படையாக அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாலும், அவர்களின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக போராட்டத்தில் குதித்து, வன்முறையில் ஈடுபடுவதாலும் எடியூரப்பா அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலுவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் பல்லாரி மாவட்டம், ஹொஸ்பேட் நகரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

சாலைகளில் டயர்களை கொளுத்தியும், அமித்ஷா படத்தை எரித்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜ ஆட்சி அமைந்தால் ஸ்ரீராமுலுவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று எடியூரப்பா உள்பட பாஜக தலைவர்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்று குற்றம் சாட்டினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கொப்பள் மாவட்டத்திலும் ஸ்ரீராமுலு ஆதரவாளர்கள் அமித்ஷா படத்தை எரித்து போராட்டம் நடத்தினர்.

இந்தக் குழப்பங்களால் எடியூரப்பா அரசு ஓராண்டுக்கு மேல் நீடிக்காது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Response