காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற இரு அவைகளும் இன்று கூடின.
அதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டபிரிவு, காஷ்மீர் மக்களுக்கான 35 ஏ சட்டபிரிவு ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு பிரிவுகளை ரத்து செய்வது குறித்து மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். இதற்கான குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பாணையையும் மத்திய அரசு வெளியிட்டது.
இதர்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இது தொடர்பாக, ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கூறும்பொழுது,
இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாளாக இன்று குறிக்கப்படுகிறது. அரசின் இந்த முடிவு சட்டவிரோதம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. இதனால் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியா இராணுவ ஆட்சி செய்வதற்கு வழிவகுக்கும்.
காஷ்மீரின் மக்களை பயங்கரவாதிகளாக்கி நிலப்பகுதியை பெற அவர்கள் விரும்புகின்றனர். இதனால் காஷ்மீர் பற்றிய வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் இருந்து இந்தியா தோல்வி அடைந்து உள்ளது
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.