காந்தியின் பேரனாகப் பேசியதால் சர்ச்சை பரப்புரையை இரத்து செய்த கமல்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில்,அந்தக் காலத்தில் வெள்ளையனே வெளியேறு எனப் போராடினோம். தற்போது கொள்ளையனே வெளியேறு எனப் போராட வேண்டிய சூழல் வந்துவிட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் தான் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீகக் கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்வி கேட்க நான் வந்திருக்கிறேன் என நினைத்துக்கொள்ளுங்கள்.

இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக மூவர்ணக்கொடியில் அந்த மூன்று வண்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டி சொல்வேன் என்று கூறினார்.

கமல்ஹாசன் கூறிய இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கமல்ஹாசனுக்கு, பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், தென்னிலை, பரமத்தி ஆகிய இடங்களில் நேற்று கமல்ஹாசன் திறந்தவேனில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கரூரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசிவிட்டு தேர்தல் பரப்புரையை இரத்து செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் மதுரைக்குச் சென்றுவிட்டதாகவும், மீண்டும் வருகிற 16 ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதி பரப்புரையில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார் எனவும் கட்சியினர் தெரிவித்தனர்.

பரப்புரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த வேளையில் திடீரென கமல்ஹாசன் பரப்புரையை இரத்து செய்தது ஏன்? என நிர்வாகிகள், தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

கோட்சே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பரப்புரையில் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகக் கூட இருக்கலாம் என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Response