ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய ஹைதராபத் அணியின் தொடக்க வீரர்களான ஜானி பார்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஜானி 39 (35) ரன்களில் வெளியேற, தொடர்ந்து விளையாடிய வார்னர் அரைசதம் அடித்தார். இதையடுத்து வார்னார் 85 (53) ரன்களில் அவுட் ஆக, இடையே வந்த விஜய் ஷங்கர் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் ஆல்ரவுண்டர் ரஸ்ஸல் 2 விக்கெட்டுளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 182 ரன்கள் இலக்காக களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர் ‘லின்’ இரண்டாவது ஓவரிலேயே 7 ரன்களுடன் சகிப் சுழலில் பெவிலியன் திரும்பினார். பின்னர் நிதிஷ் ரானாவுடன் ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா சிறப்பாக ரன்கள் விளையாடினார். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் சேர்த்தனர். உத்தப்பா 27 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த போது சிதார்த் கவுல் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அதன்பின்னர், வந்த தினேஷ் கார்த்திக் 2 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார். நிதிஷ் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்து அரைசதம் கடந்தார். இவரும் ஆண்ட்ரே ரஸலும் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். ரானா 47 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்த போது ரஷித் கானின் சுழலில் வெளியேறினார். 16 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 123 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் மீதமுள்ள 4 ஓவர்களில் கொல்கத்தா அணி 59 ரன்கள் தேவைப்பட்டன.

ஐதராபாத் அணி எளிதில் வென்றுவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ரஸல் தனது அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். குறிப்பாக 19 ஓவரில் அவர் புவனேஷ்வர் பந்துவீச்சில் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இறுதியில் கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஸல் ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 49 ரன்களும், சுப்மண் கில் 10 பந்துகளில் 18 ரன்களும் களத்தில் இருந்தனர்.

Leave a Response