விஜயகாந்த்துடன் கூட்டணி – கமல் போடும் புதிய கணக்கு

2019 நாடாளுமன்றth தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் இன்று (பிப்ரவரி 26) கூறியிருப்பதாவது…

‘2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான, ‘மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனுவினை’ கட்சியின் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையகங்களில் 28/02/2019 முதல் 07/03/2019 வரை பெற்றுக்கொள்ளலாம்.

புதியதோர் தமிழ்நாட்டை உருவாக்க விழைவோர் இவ்விருப்ப மனுவைப் பெற்றுக்கொள்ளலாம். மாற்றத்தை விரும்புவோர் இவ் விருப்ப மனுவில், ‘தான்’ தகுதியானவர் என்று நினைப்பவரை பரிந்துரைக்கலாம். அல்லது, தமக்கே அத்தகுதிகள் இருப்பதாய் நம்புபவர் இம்மனுவை சமர்பிக்கலாம்.

மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினராக இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விருப்ப மனுவைப் பெற விண்ணப்பத்தொகை ரூ. 10,000 செலுத்துதல் அவசியம்.

விருப்ப மனு அளி்ததவர்களுக்கான நேர்காணல் மக்கள் நீதி மய்யத்தின் சென்னை தலைமையகத்தில் 07/03/2019 ற்கு பிறகு, கட்சியின் ‘தேர்தல் குழு’ அறிவிக்கும் தேதியில் நடத்தப்படும்.

சாதனை என்பது சொல் அல்ல. செயல்.
நாளை நிகழப்போகும் மாற்றத்தை நமதாக்கிக் கொள்ள விரைந்து விண்ணப்பிக்கவும்’.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் கமல் கட்சி தனித்துப் போட்டியிடவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.

ஆனால் இவ்வறிவிப்பை வெளியிட்ட கையோடு நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இன்று தில்லி சென்ற கமல், மார்க்சிஸ்ட் கட்சியின் பிரகாஷ்காரத், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரைச் சந்தித்தார். அங்கு செல்லுமுன் சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது….

ரஜினியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் என கூறினார்.

கருத்து வேறுபாடுள்ள கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என கூறிய அவர், வருகிற 28 ந்தேதி முதல் 7 ந்தேதி வரை விருப்ப மனு பெற்று கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தில் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். கூட்டணிக்காக சிலர் எங்களை அணுகினார்கள்.

தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தால் பேசுவோம் என கூறினார்.

ஒரேநாளில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது, தனியாகப் போட்டியிட்டால் சிக்கல், மிகக்குறைந்த ஓட்டுகள் வாங்கினால் மதிப்பு போய்விடும் எனவே எப்படியாவது கணிசமான ஓட்டுவங்கி உள்ள ஏதாவதொரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாக வேண்டும் என்று கமல் தீவிரமாக இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அதனால் தில்லியில் செல்வாக்குள்ள கட்சிகளோடு பேசிவிட்டு அதை வைத்துக்கொண்டு விஜயகாந்த்தையும் அழைத்து ஒரு புதிய கூட்டணி அமைக்க முயல்கிறார் கமல் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response