கடைசி பந்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா – இந்தியா ஏமாற்றம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா மட்டைப்பந்தாட்ட அணி 2 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி 20 போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 24 இரவு நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் ராகுல் 50, தோனி 29, கோலி 24 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்டர் நைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் (1 ரன்), கேப்டன் பிஞ்ச் (0) வந்த வேகத்தில் வெளியேற்றப்பட்டனர்.

இதன் பிறகு மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டார்சி ஷார்ட்டும், கிளைன் மேக்ஸ்வெல்லும் இணைந்து தங்கள் அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர்.

அணியின் ஸ்கோர் 89 ரன்களை எட்டிய போது, மேக்ஸ்வெல் 56 ரன்களில் (43 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அதைத் தொடர்ந்து டார்சி ஷார்ட் (37 ரன்) ரன்-அவுட் ஆக, இந்தியாவுக்கு சற்று நம்பிக்கை பிறந்தது.

கடைசி கட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா 19-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 2 ரன் மட்டுமே கொடுத்து மிரட்டினார்.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் நின்ற ஜெயே ரிச்சர்ட்சன், கம்மின்ஸ் ஜோடி முதல் 5 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்தனர். இதனால் கடைசி பந்தில் அந்த அணிக்கு 2 ரன் தேவையாக இருந்தது. இதை எதிர்கொண்ட கம்மின்ஸ் பந்தை நேர் பகுதியில் அடித்து விட்டு 2 ரன் ஓடினார். இதனால், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி வெற்றி இலக்கை எட்டியது.

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Leave a Response