விராட் கோலி தலைமையிலான இந்திய மட்டைப்பந்தாட்ட அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துவிட்டன. முதல் போட்டியிலும், மூன்றாவது போட்டியிலும் வென்ற இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சிட்னியில் நடைபெற்றுவரும் கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் மட்டை பிடித்த இந்திய அணியின் புஜாரா மற்றும் பன்ட் ஆகியோரின் அபார சதத்தின் உதவியுடன் 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ஆஸ்திரேலிய அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கவிருந்தது. ஆனால் மழையின் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை. உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஷமியின் ஓவரில் கம்மின்ஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மற்ற ஆஸ்திரேலிய வீரர்களும் சிறிது நேரம் மட்டுமே தாக்கு பிடித்தனர்.
கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹேஸல்வுட் – ஸ்டார்க் ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களைச் சிறிது நேரம் சோதித்தனர். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சில் நிதானமாக எதிர்கொண்டனர். இந்தக் கூட்டணி கடைசி விக்கெட்டுக்கு 40 ஓட்டங்களுக்கு மேல் குவித்தது.
இவர்களை குல்தீப் யாதவ் பிரித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் ஷமி, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்றது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலிய மண்ணிலேயே அந்த அணியைத் துவம்சம் செய்துவரும் இந்திய அணிக்குப் பாராட்டுகள் குவிகின்றன.