திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் இரத்து

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத்துக்கு 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி 2 ஆவது முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக கலைஞர் மரணம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமைத் தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.

தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் முறையீடு செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 19 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி சனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் தேர்தலை இரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை இரத்து செய்யக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response