2018 ஆம் ஆண்டுக்கான இயல் விருது பெறுகிறார் இமையம்

கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பாக இயங்கிவரும் எழுத்தாளர்களைக்
சிறப்பிக்கும் வகையில் இயல் விருது வழங்கிவருகிறது.

அந்தவகையில் 2018 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருது, 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் இமையத்துக்கு கொடுக்கப்படவுள்ளது.

இச் செய்தியை தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பகிர்ந்துகொண்டார்.இந்த விருது டொறொன்டோவில் 2019 ஜூன் மாதம் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது.

எழுத்தாளர் இமையம் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது விருத்தாசலத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துவரும், வெ. அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்ட இவர் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

தமிழ்நாட்டு கிராமங்களில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களே இவர் கதைகளின் பாத்திரங்கள். அவர்களின் வாழ்க்கை, கலாசாரம், சாதி, வகுப்பு, பால்பேதங்களால் அவர்கள்படும் அவலம் போன்றவற்றை அவர்களின் மொழியிலேயே கதைகளாக வடித்திருக்கிறார். இவரது முதல் நாவலான ‘கோவேறுக் கழுதைகள்’ ‘Beasts of Burden’ என ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.

சாதி ஆணவக்கொலையைப் பற்றிய பெத்தவன் என்கிற நெடுங்கதை, இவரின் படைப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று. இக்கதை தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு திருப்பதி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங்கதெ’, ‘செல்லாத பணம்’ ஆகியவை இவருடைய நாவல்கள். இவை தவிர நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் இதுவரை வெளிவந்துள்ளன. அக்னி விருது, பெரியார் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர்.

இவருக்கு இயல் விருது அறிவிக்கப்பட்டதும் ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response