நயன்தாராவுக்கு அடுத்த ஆண்டும் பிறந்தநாள் வரும் முறிந்த தென்னைகளையும் பாருங்கள்

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவை முழுமையாக வெளீயே தெரியாவண்ணம் வெவ்வேறு திசைதிருப்பல்கள் நடக்கின்றன.

இந்நிலையில் சமூக ஊடகங்கள் அவற்றை வெளிப்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்றாக மயிலன் சின்னப்பன் என்பவர் எழுதியிருக்கும் முகநூல் பதிவு….

என் சொந்த கிராமம் சூரப்பள்ளத்தில் (பட்டுக்கோட்டை தாலுக்கா) விளை நிலங்கள் சுடுகாடு போல ஆகியிருக்கின்றன.

மாத அருப்பு இருபதாயிரத்திற்கு தென்னையை நம்பி இருந்த பல சொந்தங்கள் அதிர்ச்சியில் தேங்கிப்போயிருக்கிறார்கள்.

கறவை மாடுகள் செத்துப்போயிருக்கின்றன. குடி நீர் இணைப்பு முற்றிலுமாக துண்டாகியிருக்கிறது.

அரசு சாலைகளின் ஓரத்திலிருக்கும் வெள்ளை கோட்டு எல்லையை தாண்டி விழுந்த மரங்களை அப்புறப்படுத்தலில் மட்டுமே கவனம் கொள்கிறது.

செத்த மரங்களை போக்குவரத்து இடையூறு என்ற அளவில் மட்டும் பார்க்கும் தொணியில் பணிகள் நடக்கின்றன என்று அறிகிறேன்.

குடி நீரையும் மின்சாரத்தையும் கொடுத்துவிட்டு அரசு ஒதுங்கிவிட்டால் இதைவிட மிக பெரிய துரோகம் எதுவுமே இருக்கமுடியாது. இன்றைய நிலைப்படி குடி நீரையும் ஊரில் டாங்கர் வைத்திருக்கின்ற அண்ணன் ஒருவர் சொந்த செலவில் எல்லோருக்கும் கொண்டுவந்திருக்கிறார்.

விழுந்த ஒவ்வொரு தென்னை மரமும் பல குடும்பங்களின் ஒரு வேளை சோறு. போர்க்கால அடிப்படையில் ரொட்டிகளையும், குடி நீரையும், மின்சாரத்தையும் கொடுத்துவிட்டு அரசு கிளம்பிய பின்னர் பட்டுக்கோட்டை, அதிராமப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவுர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சார்ந்த கிராமங்களில் இனி வாரம் ஒரு விவசாய பட்டினி தற்கொலை நடக்கும்.

மீளவே முடியாத பெருந்துயரத்தில் தத்தளிக்கும் எங்கள் ஊர்களைப் பற்றி, நிழலுக்கு நின்ற மரங்களை வர்தாவில் பறிகொடுத்தவர்களுக்கு புரியவே புரியாது.

நான் உங்களிடம் இங்கு வந்து துணி, உணவு, பால், மருந்துகள் கேட்கவில்லை. அதை நீந்தி கடக்க எங்களுக்கு தெரியும். தோள்கொடுக்க நல்லுள்ளங்கள் இருக்கிறார்கள்.

நான் எனக்கு ஃபேஸ்புக்கில் சமுதாய பொறுப்புள்ள நண்பர்களை வைத்திருக்கிறேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களிடம் பிச்சை கேட்கிறேன். உங்களுக்கு சாத்தியமான களங்களில் எங்கள் ஊர்களைப் பற்றி கொஞ்சம் எழுதுங்கள். நீங்கள் அச்சு அல்லது காட்சி ஊடகத்தில் இருப்பவரெனில் அருள்கூர்ந்து உங்கள் கவனத்தை எங்கள் பக்கம் திருப்புங்கள்.

முதல்வரா எதிர்க்கட்சி தலைவரா என்று எங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள். உங்களால் முடிந்தால் குறைந்தது பத்தாண்டு முதலீடான முறிந்து போன எங்கள் ஒவ்வொரு தென்னைக்கும் எங்களுக்கான நிவாரணம் வாங்கிக்கொடுக்க எங்களுக்காக குரல் கொடுங்கள்.

ஆம். ஒவ்வொரு தென்னைக்கும். செத்துப்போன மாடுகளுக்கும், சேதமான வீடுகளுக்கும் நிவாரணம் கோர எங்களுடன் நில்லுங்கள். உங்களால் முடிந்தால் குறைந்தது ஒரு தற்கொலையையாவது தடுத்து நிறுத்த உதவி செய்யுங்கள். நீங்களும் சேர்ந்து தட்டினால்தான் கதவுகள் திறக்கப்படும். நயன்தாராகளுக்கு அடுத்த வருடமும் பிறந்த நாள் வரும். கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response