கார்ப்பரேட் கிரிமினல் கலாநிதிமாறனா? விஜய்யா?

கிசுகிசுக்கள் என்றால் சினிமாதான். அடுத்ததுதான் அரசியல். கொஞ்சம் கிக் குறைவு என்றாலும் கூட. இப்படி கிசுகிசுக்களை வாசிக்கிற கிளுகிளுப்பை தருகிறது சர்கார் படம். கிசுகிசுக்களில் எந்தளவு உண்மை இருக்கும் என்பது அதன் வசனகர்த்தா மட்டுமே அறிந்தது.

சினிமா பல்வேறுவிதமாக திமுகவை அவமதிக்கிறது. அதிலும் ‘கரு’வில் பிறக்கும் போதே கிரிமினல் என்பதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம். நீ மட்டும் யோக்கியமா என்ற கேள்வியை தவிர்க்க, ஹீரோ தன்னை கார்ப்பரேட் கிரிமினல் என்று நிறுவி கொள்வதாக… வில்லி யார்? கனிமொழியா? விஜய் யாரை நம்பி இத்தனை பெரிய தவறான நகர்வை வைக்கிறார் என்று தெரியவில்லை. விஜய் கிடக்கட்டும், மாறனுக்கும் திமுகவுக்கும் என்ன பிரச்சனை?

உல்டாவாக, கிசுகிசு பாணியில் நாம் விடை தேடுவதாக இருந்தால், இந்த கார்ப்பரேட் கிரிமினல் யார்?
ஆப்ஷன் 1 : தயாரிப்பாளர்
ஆப்ஷன் 2 : கதாநாயகன் (தமிழகத்தில் ஆயிரம் கோடி சம்பளம் வேறு யாருக்கு கிடைக்க போகிறது?)

கள்ள ஓட்டுப் போடபட்டால், அதனால் உணர்ச்சிவசப்படாவிட்டால், ஜெயமோகன் எழுதும் வசனம், “அப்போ உன் மனைவியை யாராவது கள்ளத்தனமாக போ… சும்மா இருப்பாயா” திருட்டு கதை-வசன-இயக்கம் எழுதின கும்பல் கேட்டு என்னய்யா ஆகப்போகுது? ஒருவேளை மக்களை சுரணையுள்ளவர்களாக்க நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்றால், கதை திருட்டில் நாங்கள் இதையே உங்களை பார்த்து கேட்கலாம் அல்லவா? அடுத்தவன் மனைவியை நோண்டுவதுதான் சினிமாக்காரன் வேலையா?

நீங்க எப்படியோ போங்க, சினிமா என்ற பெயரில் பொதுமக்களை தரம் தாழ்த்தாதீங்க. தனிப்பட்ட காழ்ப்புகளை சினிமாவின் பெயரில் பொதுமை படுத்தாதீர்கள். சரி… கிசுகிசுக்களை ஒதுக்கிவிட்டு சினிமாவை சினிமாவாக பார்க்கலாம்.

பல்வேறு விஜய் படங்களின், பல்வேறு காட்சிகள் மீண்டும் மீண்டும் எடுக்கப்படுகிறது. அப்படியாவது படம் சுவாரசியமாக இருக்கிறதா என்றால், இடையிடையில் இளைய ரசிகர்கள் பலர் தூங்கி வழிகிறார்கள். வயதானவர்கள், அனுபவசாலிகள் ஆர்வமாக கவனிக்கிறார்கள். அரசியல் படமா, அடிதடி படமா என்று கணிக்க முடியவில்லை. முதல்வன் வந்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன, அதில் பாதியாவது தொடவேண்டாமா?

சோஷியல் மீடியா பிரபலங்களுக்கு எதிர்காலத்தில் சினிமாவில் ஓரிரு காட்சிகள் தலைகாட்ட பிரகாசமான வாய்ப்புள்ளது.

கீர்த்தி சுரேஷ் காலி. தண்டத்துக்கு ஒரு கேரக்ட்டர். ரஹ்மான் சண்டை காட்சிகளில் டயர்ட் ஆகிவிட்டார். வசனம் கேட்டு கேட்டு ரசிகர்கள் டயர்ட் ஆகிவிடுகிறார்கள். விஜய் செம ஃபிட்டாக இருக்கிறார். ஆனால், இதுமாதிரி நாலு படம் பண்ணினால் மன உளைச்சலில் மாட்டப் போகிறார்.

(டிஸ்கி: இங்கே உபயோகித்த பெயர்கள் அனைத்தும் கற்பனையானவை,யாரையும் குறிப்பிடுபவை அல்ல, ஜெயமோகன், விஜய், முருகதாஸ் மற்றும் பிறர் உட்பட)

– செல்வகுமார் கணேசன்

Leave a Response