மக்களை மந்தைகளாக காட்டும் வக்கிரம் – சர்கார் விமர்சனம்

பொதுவாகச் சொல்வதென்றால் நான் மசாலாக் கலவைப் படங்களின் ரசிகன்தான். சண்டையாகவோ அதிரடி வசனங்களாகவோ நாயகனின் மிதமிஞ்சிய சாகசங்கள் வருகிறபோது, இப்படியெல்லாம் யதார்த்தத்தில் நடக்குமா என்று குழப்பிக்கொள்வதில்லை. இப்படியெல்லாம் சாகசம் செய்த ஒருவனது கதை என்பதாக எடுத்துக்கொள்வதில் எனக்குச் சிக்கலில்லை. லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கொண்ட நட்சத்திர நடிகரின் படத்தில், வணிக ஏற்பாடுகளை மீறி சில சமூக அக்கறைக் கருத்துகள் வெளிப்படுமானால் அத்தனை லட்சம் பேரிடம் அந்தக் கருத்துகள் போய்ச்சேர்கின்றன என்று (அப்பாவித்தனமாக?) நினைத்துக்கொள்வேன். ஆனாலும், எதற்கும் ஒரு அளவு இருக்கிறதல்லவா? பண்டிகைக் கொண்டாட்டமும் அதுவுமாக மிகவும் பிடித்த இனிப்பும் காரமும் வந்துள்ளன என்பதற்காக அளவுக்கு மேலே திணித்துக்கொள்ள முடியாதுதானே?

‘சர்கார்’ படத்தை ரசித்தே பார்த்தேன். ஆனால் அது அப்படி அளவுக்கு மேல் திணிக்கத்தான் செய்கிறது. முதலில், சர்கார் என்பது கதாநாயகனின் பெயரில்லை என்கிறபோது, அரசு, அரசாங்கம் என்றெல்லாம் தமிழ்ச்சொற்கள் இயல்பாகப் புழக்கத்திற்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகு, படத்தின் தலைப்பில் எதற்காகப் பெரிதும் நடைமுறையில் இல்லாத சொல்? அதுவே ஒரு மொழித் திணிப்புதான். அப்படியே ஓரளவுக்கு இன்னமும் புழக்கத்தில் இருக்கிறது என்றாலும் ‘சர்க்கார்’ என்றுதான் மக்கள் சொல்வார்கள். ஆனால், படம் வசூலை அள்ளிவிட்டதால், பெயரெழுத்து சோதிடப்படி அந்தச் சொல்லின் ‘க்’ என்ற எழுத்து நீக்கப்பட்டது சரிதான் என்றாகிவிடும். கதையிலோ கலையிலோ முழு நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் படங்களுக்கும் இப்படி பெயர் ராசிப்படி தலைப்பு வைப்பது மேலும் அதிகரிக்கும். அவ்வகையில் ஒரு மூடநம்பிக்கைத் திணிப்பும் இருக்கிறது. (சர்கார்தான் சரி என்று வசனகர்த்தா பாடம் நடத்திப் பேட்டி கொடுப்பாரோ?)

விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் திரையரங்கில் குழந்தைகளும் பெரியவர்களும் ரசித்து வரவேற்றுக்கொண்டிருக்க, எதற்காக அறிமுகத்திலிருந்தே வருகிற சிகரெட் புகைக்கும் காட்சிகள்? அது எந்த வகையில் அந்தக் கதாபாத்திரத்தின் பண்பைக் காட்டுகிறது அல்லது சிறப்புச் சேர்க்கிறது? சட்டப்படி படத்தின் முதல் தொடக்கத்திலும் இடைவேளைக்குப் பிந்தைய தொடக்கத்திலும் புகையிலை எதிர்ப்பு விளம்பரத்தை இணைத்துவிட்டு, அடுத்த நொடியிலேயே, அபிமான நடிகரை வாயில் நீண்ட சிகரெட்டோடும் முகத்தைத் தழுவும் புகையோடும் வரவழைப்பது, சிகரெட் நிறுவனங்களின் சந்தைக்குத் தோதான திணிப்பு. ராகுல் திராவிட் அறிவுரைக்கு அவமதிப்பு.

கதாநாயகனைக் காதலிப்பதாலும் ஒரு பாடல் காட்சியில் ஆடுவதாலும் மட்டுமே கதாநாயகியாக அடையாளப்படுத்தப்படுவது போன்ற கொசுறுத் திணிப்புகளும் உண்டு. உண்மையான கதாநாயகி என்னவோ, சொந்தத் தகப்பனாகிய முதலமைச்சரையே தொலைவிலிருந்து கட்டுப்படுத்துகிற, கொலைக்கும் துணிகிற, வரலட்சுமி சரத்குமார் மூலமாக வெளிப்படுகிற கோமளவல்லிதான்.

இப்படியாகத் தமிழகத்தின் அண்மைக்கால அரசியல் காலண்டர் நினைவூட்டப்படுகிறது. அதில் சுவையும் உண்டு, துணிவும் உண்டு. ஆனால், பொதுநிகழ்ச்சி மேடையில் தன் அருகில் வந்து சமமாக உட்காருகிற எதிரியிடம், ஒரு முதலமைச்சர், ஆளும் கட்சித்தலைவர் இவ்வளவு அப்பட்டமாகவா தனது துரோகங்கள் பற்றிப் பேசுவார்? அந்த ‘நம்பர் ரெண்டு’, முக்கியப் பிரமுகர்கள் சந்திக்கிற இடத்தில் அவ்வளவு அப்பட்டமாகவா பணத்தாள்களால் ஜனநாயகத்தைக் கொலை செய்வது பற்றிப் பேசுவார்? கற்றுக்குட்டித்தனமான சித்தரிப்புத் திணிப்புகள்.

ஆளுங்கட்சி விவகாரங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறவர்களின் அரசியல் பற்றி மறந்தும் அலட்டிக்கொள்ளவில்லை. சர்கார் கவலையெல்லாம் மாநில நிலவரம் மட்டும்தான் போல, நாடு தழுவிய நிலைமைகள் பற்றி கண்டுகொள்ள மாட்டார் போல.

ஆனால், இந்தியத் தேர்தல் சட்டத்தின் ‘49 பி’ பிரிவு பற்றிய தகவல், இது வரையில் தேர்தல் சட்ட நுணுக்கங்களை அறிந்தவர்களுக்கு மட்டுமே (அநேகமாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலருக்கும் கூடத் தெரிந்திராத) இந்தப் படத்தின் மூலம் பரவலாகிறது. ஜனநாயகத்தில் இப்படிப்பட்ட தகவலறிவு முக்கியமானது. தன்னுடைய வாக்கை வேறு யாரோ கள்ளத்தனமாகப் பதிவு செய்துவிட்ட நிலையில் ஒரு வாக்காளர் என்ன செய்ய முடியும், என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டல் தேவையானது. படத்திலேயே சொல்லப்படுவது போல, ‘49 ஓ’ சட்டப் பிரிவு பற்றிப் பின்னாளில்தான் மக்களுக்குத் தெரியவந்தது, அது போல இந்நாளில் ’49 பி’ பிரிவு பற்றித் தெரியவருவது ஆரோக்கியமானதுதான்.

படிப்படியாக மக்கள் சுந்தர ராமசாமியின் ஆதரவாளர்களாகிறார்கள், அப்புறம் ஆட்சியாளர்கள் பரப்புகிற பொய்ச்செய்திகளை நம்பி அவரைக் கைவிடுகிறார்கள், அதற்கப்புறம் கடைசி நேரத்தில் மறுபடியும் அமோக ஆதரவாளர்களாகிறார்கள். மக்களை இப்படி நிலையற்ற மந்தைகளாகக் காட்டுவது என்னவிதமான வக்கிரம்?

கேள்வி கேட்க ஆளில்லை என்ற நிலைமை ஜனநாயத்துக்கு ஆபத்து என்ற கருத்து சரியானது. இன்றைக்கு நாடு முழுக்க அப்படிப்பட்ட நிலைமையை ஏற்படுத்துகிற முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், அரசியலற்ற வேட்பாளர்கள் என்ற கருத்துத் திணிப்பு மேலும் ஆபத்தானது.

ஜல்லிக்கட்டுப் போராளிகளுக்கும் சென்னைப் பெருவெள்ள மீட்பர்களுக்கும் படம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. நல்லது. இன்னொருபுறம், அரசியல் விழிப்புக்குப் பயன்டக்கூடிய அந்த மக்கள் இயக்கங்கள் சார்ந்த பொது உணர்வுகள் சினிமாச் சந்தைச் சரக்காகப் பயன்படுத்தப்படுகின்றனவோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

இருந்தபோதிலும் – மிகையானாலும் விறுவிறுப்பான சண்டைகள், காலப் புதுமையோடு கலந்த பாடல்கள், கார்ப்பரேட் கிரிமினல்கள் பற்றிய பதிவு, இளந்தலைமுறைகளை ஆக்கிரமித்திருக்கும் ஆங்கில ஆதிக்கத்தினூடாக காதல் ரகசியத்துக்குச் செந்தமிழ்ப் பேச்சுதான் வழி என்ற புன்னகைத் தருணம், சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும் நுட்பம் என்று ஏ.ஆர். முருகதாஸ் கோர்த்திருப்பதை சுவைத்துக்கொண்டிருந்தேன். மனசுக்குள் ஒரு கேள்வி ஓடிக்கொண்டிருந்தது: இந்த ஒட்டுமொத்தக் கதைப்பின்னலில் எந்தப் பகுதி, இது தனது கதையிலிருந்து களவாடப்பட்டதென வழக்காடி வென்ற வருண் ராஜேந்திரனின் கற்பனை?

-குமரேசன்

Leave a Response