ஒரேநாளில் 6 அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை – இடுக்கிக்கு எச்சரிக்கை

தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த உயரம் 152 அடியாகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.

இந்நிலையில் தற்போது கேரளாவில் தீவிரம் அடைந்துள்ள பருவமழையும் கை கொடுத்ததால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வந்தது.

நேற்று முன்தினம் காலை அணையின் நீர்மட்டம் 136.10 அடியாக இருந்தது. தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்ததால் நேற்று பிற்பகல் 12.50 மணியளவில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. ஒரே நாளில் பெய்த பலத்த மழையால் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து, 142 அடியை எட்டியுள்ளது.

இதையடுத்து இடுக்கி மாவட்டத்துக்கு இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

Leave a Response