
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். (இவர் ஏற்கெனவே ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர். ஜெயலலிதா வழக்கிலிருந்து விலகுமாறு பாஜக மேலிடமும் கர்நாடக அரசும் தன்னை ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தனது சுயசரிதையில் எழுதியிருந்தவர்) இதற்கான அரசாணையை கர்நாடக அரசு வெளியிட்டது.
இதையடுத்து அரசு தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை தயாரிக்கும் பணியில் ஆச்சார்யா மற்றும் அவரது உதவியாளர் சந்தேஷ் சவுட்டா ஆகியோர் இறங்கி 18 பக்க வாதத்தை தயாரித்தனர்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பாட்டீலிடம் ஆச்சார்யா தனது தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். 18 பக்கங்களில் 23 அம்சங்களை எழுத்துபூர்வமாக வைத்திருக்கிறார் பி.வி.ஆச்சார்யா.
அதிலுள்ள விவரங்களின் ஒரு பகுதி…
இந்த வழக்கில் 32 போலியான தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பல கோடு ரூபாய் பணப் பரிவர்த்தனை சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளது. இந்த 32 நிறுவனங்களிலும் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் 1991-96 காலகட்டத்தில் நிர்வாக இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் பணிபுரிந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் 1991-96 காலகட்டத்தில் 52 புதிய வங்கிக் கணக்கு தொடங்கி வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட பணத்தை – பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர். இது சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்களின் வாக்குமூலம் மூலம் உறுதியாகிறது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ரூ.66.65 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த நீதிபதி குன்ஹா, ரூ.55 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் இருப்பதை ஏற்றுக் கொண்டார்.
அதேபோல, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் நமது எம்ஜிஆர் பத்திரிகை மூலம் ரூ.14 கோடி வருமானம் வந்ததாக கணக்கு காட்டியுள்ளனர். அந்த நிர்வாகத்தில் அவ்வாறு வருமானம் வரவில்லை என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் பினாமியாக செயல்படுகிறார்கள் என்பது பினாமி சட்டத்தின் கீழ் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கம் – வைர நகைகள், ரூ.19 கோடி மதிப்பிலான கட்டிடங்கள், தமிழகம் முழுக்க இருக்கும் 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் வாங்கி குவித்துள்ளனர்.
1991-96 காலகட்டத்தில் இருந்த வருமானமும் சொத்து மதிப்பும் முந்தைய மதிப்புக்கும், பிந்தைய மதிப்புக்கும் பெரிய வித்தியாசத்தைக் காட்டுகிறது என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்த குற்றச்சாட்டு உண்மை எனத் தெளிவாக தெரிய வருகிறது.
எனவே, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, சம்பந்தப்பட்ட 4 பேரையும் கூட்டுச் சதி செய்தல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என்ற பிரிவின் கீழ் உரிய தண்டனையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.


