
கலைஞர் தொலைக்காட்சியின் அடையாளமாகிவிட்ட ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சி, உலகில் மிகப்பெரும் மதிப்பிற்குரிய கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் ,முதன்முறையாக இப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருகிறது.
மானாட மயிலாட நிகழ்ச்சி அதில் இடம்பெறுகிற நடனங்களுக்கு இணையாக அதன் அரங்களுக்கும் வரவேற்பு இருந்தது. அதன் உச்சமாக ,‘அமெஸ் ரூம் இல்யூஷன்’ (Ames Room Illusion) என்று சொல்லப்படுகிற ‘இருக்கு, ஆனா, இல்லை’ (Illusion) என்ற அடிப்படையில் வெவ்வேறு அளவுகளில், கோணங்களில் ஒரு அறைக்குள் உருவாக்கப்படும் அரங்க அமைப்பு. ஒவ்வொரு பக்கங்கள், முனைகள் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத அளவில் அந்த அரங்கம் அமைக்கப்பட்டிருக்கும்.
‘மானாட மயிலாட’ நிகழ்ச்சிக்காக சுமார் 4000 சதுர அடியில் அதுபோன்ற ஓர் அரங்கினை அமைத்து, ஒரே ஒரு சாதாரண லென்ஸ் கொண்ட காமிரா மூலம் படம் பிடிக்கப்பட்டு, சுமார் 40 நிமிடம் நடனமாடியிருக்கிறார்கள். உலகிலேயே இவ்வளவு பெரிய ‘அமெஸ் ரூம் இல்யூஷன்’ அரங்கு அமைத்திருப்பது இதுவே முதல்முறை. அதுவும் அதில் தொடர்ந்து நாற்பது நிமிடங்கள் நடனமாடி சாதனை புரிந்ததும் இதுவே முதல்முறை .
கடந்த ஏப்ரல் 18ம் தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் இதற்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் லண்டனிலிருந்து வந்த கின்னஸ் குழுவினரின் முன்னிலையில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்தநிகழ்ச்சியும் அதை நடத்தும்போது நடனஇயக்குநர் கலா அடிக்கும் கமெண்ட்டுகளும் பெரும் கிண்டலுக்கு ஆளாகியிருக்கின்றன. இது சம்பந்தமாக பேசிய நடனஇயக்குநர் கலா, அவ்வாறு என்னைக் கிண்டல் செய்வது எனக்குக் கிடைத்த வெற்றி காரணமாகத்தான். என்னைக் கிண்டல் செய்தால் ஒருவருக்குப் பணம் கிடைக்கிறதென்றால் எனக்குச் சந்தோசம்தான். அதேசமயம் அவர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள், என்னை எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்துகொள்ளுங்கள் என்னைக் கிண்டல் செய்வதாக நினைத்து நடனக்கலையைக் கிண்டல் செய்யாதீர்கள், அப்படிச் செய்வது கடவுளையே கிண்டல் செய்வது மாதிரி என்று சொன்னார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினரும் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தார்கள். அவை எல்லாவற்றையும் தாண்டி உலகசாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
