கால்பந்து – பனாமாவை பந்தாடிய இங்கிலாந்து

பெல்ஜியம், இங்கிலாந்து, பனாமா, டுனீசியா என்று நான்கு நாடுகள் இருக்கும் குரூப் ஜி பிரிவில் இன்று இங்கிலாந்தும், பனாமாவும் மோதின.

ஏற்கெனவே பெல்ஜியம் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தச் சுற்றுக்கும் தகுதி பெற்றாகிவிட்டது. அடுத்து இங்கிலாந்து அணி ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளுடன் காத்திருக்கிறது.

இதனால் இன்றைய போட்டி இங்கிலாந்துக்கு முக்கியமான போட்டியாகவே இருந்தது.

பனாமாவை பணாலாக்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கினார்கள் இங்கிலாந்து வீரர்கள். அதுபோலவே ஆக்கியும்விட்டார்கள்.

ஆட்டத்தின் துவக்கத்திலேயே டிஷ்யூம், டிஷ்யூமை இரண்டு அணிகளுமே துவக்கிவிட்டார்கள். 5-வது நிமிடத்தில் பனாமா வீரர்களின் தாக்குதலில் இங்கிலாந்து வீரர் லிங்கார்டு கண்ணில் அடிபட்டு துடித்தார்.

மருத்துவர்கள் ஆட்டக் களத்திற்குள் வந்து சிகிச்சையளித்துக் கொண்டே போக.. அம்பயர் அவர்களை வெளியே போகச் சொன்னார். “ம்ஹூம். நீங்க வேண்ணா வெளில போங்க…” என்று பட்டென்று பதில் வந்தது. பொறுமையாக அந்த வீரருக்கு பயிற்சிகளைக் கொடுத்து பிரச்சினையில்லை என்பது தெரிந்தவுடன்தான் வெளியேறியது மெடிக்கல் டீம்.

இந்த அக்கப்போர் முடிந்த சில நொடிகளில் கார்னர் ஷாட் கிடைத்தது இங்கிலாந்து அணிக்கு.. மிக அழகாக தூக்கி அடிக்கப்பட்ட அந்த பந்தை பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த இங்கிலாந்து அணி வீரர் ஜான் ஸ்டோன்ஸ் தன்னை சிறை வைத்திருந்த பனாமா வீரர்களிடமிருந்து தப்பித்து ஓடோடி வந்து தன் தலையால் முட்டி கோலாக்கினார். நம்பவே முடியவில்லை. ஆட்டம் துவங்கிய 8 நிமிடங்களில் முதல் கோல்..!

கோல் விழுந்த கோபத்தில் பனாமாவின் 11-ம் எண் வீரர் மிகக் கடுமையாக இரண்டு முறை கவட்டைக் கால் கொடுக்க உடனேயே அவருக்கு மஞ்சள் அட்டை கிடைத்தது.

15-வது நிமிடத்தில் மிக வேகமாக பாஸிங்கில் கொண்டு போன பந்தை பனமா கோலாக்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் அது ஜஸ்ட் மிஸ்ஸிங்காகிவிட்டது.

அடுத்த நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ரெண்டாங்கை கால் உதைத்து கீழே தள்ளினார் பனாமா வீரர். அவரும் அழுது புலம்பி வலித்தபடியே நிற்க.. “ஆடுறீங்களா.. இல்ல.. வெளில போறீங்களா…” என்று அம்பயர் எச்சரிக்கை விடுக்க.. சட்டென்று காலை உதறிவிட்டு ஓட ஆரம்பித்துவிட்டார். எம்புட்டு நடிப்புடா சாமி..!

22-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹார்ரி கேன் தூரத்தில் இருந்து மிக அழகான ஒரு கோலை அடித்தார். அது கோல் போஸ்ட்டின் ஓரத்தில் உரசிக் கொண்டே உள்ளே சென்றது. இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது இங்கிலாந்து.

இதற்கடுத்து பனாமா வீரர்களும் பல முறை பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இங்கிலாந்தின் கோல் போஸ்ட்டுக்குள் போனவுடன் கோட்டைவிட்டார்கள். அதிர்ஷ்டம் கை கொடுக்காமல் போக கோல் போட முடியாமல் தவித்தது பனாமா.

35-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு ஒரு கார்னர் ஷாட் கிடைத்தது. கிடைத்த பந்தை 4 முறை பாஸிங் செய்து கோல் போஸ்ட்டுக்கு கொண்டு வந்தார்கள். நான்காவது பாஸிங்கில் பந்தை தன் கைகளால் தள்ளிவிட்டும் அது போக மாட்டேன் என்று அடம் பிடிக்க இங்கிலாந்து அணியின் வீரர் லிங்கார்டு மிக லாவகமாக அதனை தனது காலால் உதைத்து கோலுக்குள் அனுப்பினார். இதன் மூலமாக கோல் 3-0 என்றானது.

கொஞ்சம் கேப் விடாமல் அடித்தால் எப்படி என்று கேட்பதுபோல அடுத்த சில நொடிகளிலேயே பந்தை திருப்பிக் கொண்டு வந்து நின்றது இங்கிலாந்து அணி. இப்போதும் பனாமா அணியின் கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டனர் இங்கிலாந்து அணியினர்.

ஸ்டோன்ஸ் கொண்டு சென்ற பந்தை மீட்க முடியாமல் அவரை லேசாக கீழே தள்ளிவிட.. அது உடனேயே பெனால்டி ஆனது. பாவம் திகைத்தே போனார்கள் பனாமா வீரர்கள். எதிர்பார்க்கவே இல்லை. நடுவரிடம் கடுமையாக சண்டையிட்டார்கள். நடுவர் அவர்களைவிடவும் அதிகமாக சண்டையிட ஒதுங்கிக் கொண்டனர் பனாமா அணியினர்.

இந்த பெனால்டியின் மூலமாக இங்கிலாந்து வீரர் ஸ்டோன்ஸ் அழகான ஒரு கோலை போட.. ஸ்கோர் 4-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை எட்ட முடியாத லீடிங்கிற்கு கொண்டு சென்றது.

இப்போதும் பந்து பனாமா கோல் பகுதியிலிருந்து விலகவே இல்லை. அப்படியே போனாலும் இங்கிலாந்து பகுதியில் பாதியிலேயே அது பிடிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டது. அப்படித்தான் 41-வது நிமிடத்தில் அது திரும்பி வர கார்னர் ஷாட் கிடைத்தது இங்கிலாந்து அணிக்கு.

இப்போதும் பனாமா வீரர்கள் தேவையில்லாமல் இங்கிலாந்து வீரர்களை கட்டிப் பிடிப்பது, இழுத்து கீழே விடுவது.. சட்டையைப் பிடித்து இழுப்பதுமாக இருக்க.. பந்து பறப்படுவதற்குள்ளாக இங்கிலாந்து கேப்டன் கேனை கீழே தள்ளிய பாவத்திற்காக இன்னொரு பெனால்டியும் இங்கிலாந்து அணிக்குக் கிடைத்தது.

விடுவார்களா.. மிக, மிக அழகாக.. ஆற அமர.. அமைதியாக 5-வது கோலை போட்டார் இங்கிலாந்து அணியின் தலைவர் கேன். இப்போது ஸ்கோர் 5-0 என்றானது.

எக்ஸ்ட்ரா நேரமான 2 நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஒருவரை பனாமா வீரர் வழக்கமாக தள்ளிவிட்டுப் போக.. இது இரு அணி வீரர்களுக்குமிடையே கருத்து மோதலாகி பின்பு முகத்தோடு முகம் வைத்து திட்டுகின்றவரையிலும் சென்றது. நல்லவேளை கை கலப்பிற்கு முன் இவர்களைப் பிரித்துவிட்டார்கள்.

அதற்குள்ளாக இடைவேளையும் வர 5-0 என்ற கோல் கணக்கில் லீடிங் என்கிற சந்தோஷத்தில் உள்ளே போனார்கள் இங்கிலாந்து வீரர்கள்.

இடைவேளைக்கு பின்பு ஆட்டம் துவங்கியபோது இரு தரப்பிலுமே மந்தமாகவே ஓட ஆரம்பித்தார்கள். துரத்த ஆரம்பித்தார்கள். எப்படியும் ஜெயிக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து வீரர்கள், எப்படியும் தோற்கத்தான் போகிறோம் என்கிற மனப்பான்மையில் பனாமா வீரர்களும் இருக்க.. ஆட்டம் சுவாரசியத்தை இழந்து கொண்டிருந்தது.

61-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் hurry kane ஒரு லாங் ஷாட்டை அடிக்க அது இன்னொரு இங்கிலாந்து வீரரின் பின்னங்காலில் பட்டாலும் மிக நேராக கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்து இங்கிலாந்து அணிக்கு 6-வது கோலை பெற்றுக் கொடுத்தது. இந்த மேட்ச்சில் hurry kane மூன்று கோல்களை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பனாமா வீரர்கள் கிடைத்த பந்தை பாஸ் செய்து கொண்டு போனாலும் உத்வேகமும், வேகமும் இல்லாததால் கோல் போட முடியாமல் தவித்தார்கள். இங்கிலாந்து அணியின் முன் கள வீரர்களை தாண்டி அவர்களால் உள்ளே புக முடியவில்லை. இதிலேயே அவர்களது பல முயற்சிகள் வீணாகின. சில முறை பந்துகள் கவரப்பட்டு இங்கிலாந்து வீரர்களின் கால்களிடம் போனது.

71-வது நிமிடத்தில் முரட்டுத்தனமான ஆட்டத்திற்காக பனாமா வீரர் முராலிக்கு மஞ்சள் அட்டை கிடைத்தது. இது ப்ரீ கிக்கிற்கும் வாய்ப்பளிக்க.. இங்கிலாந்து அணி வீரர் அடித்த பந்து கோல் போஸ்ட்டிற்கு வெளியே போய் விழுக.. ஜஸ்ட் மிஸ்ஸிங்கானது.

75-வது நிமிடத்தில் திடீரென்று பனாமா வீரர்களுக்கிக் கிடைத்த பந்து பாஸாகி கோல் போடும் நிலைமைக்கு வர அந்த அணி வீரர் அடித்த பந்தும் கோல் போஸ்ட்டை உரசிக் கொண்டு வெளியிலேயே போனது. அதிர்ஷ்டமில்லை என்று நொந்து கொண்டார்கள் பனாமா ரசிகர்கள்.

ஆனால் அடுத்த நிமிடத்திலேயே கிடைத்த பந்தை பனாமா வீரர் பலோய் மற்றவர்களை நம்பாமல் தானே சிங்கிள் ஷாட்டாக தூக்கியடிக்க அதிர்ஷ்டவசமாக அது கோலுக்குள் நுழைய பனாமாவும் கோல் லிஸ்ட்டில் இடம் பிடித்து ஸ்கோர் 6-1 என்றானது.

81-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டெர்லிங் அடித்த பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலே பறந்து போய் ஏமாற்றியது. இப்படியே மாறி, மாறி பந்தை பறிப்பதும், இழப்பதும், பாஸ் செய்வதுமாய் சென்று கொண்டிருந்தது.

89-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் அடித்த நேருக்கு நேர் பந்தை பனாமா கோல் கீப்பர் பிடித்து கொஞ்சநஞ்சம் மானத்தையும் காப்பாற்றினார்.

இதற்குப் பிறகு கூடுதல் நேரமாக கிடைத்த 4 நிமிடங்களில் இங்கிலாந்து வீரர்கள் சற்று ஒதுங்கிக் கொள்ள.. பனாமா வீரர்கள் தொடர்ந்து கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனாலும் எதுவும் பலனளிக்கவில்லை.

கடைசியாக 6-1 என்ற கோல் கணக்கில் பனாமாவை பந்தாடி வெற்றி கண்டது இங்கிலாந்து.

குரூப் ஜி பிரிவில் இப்போது இங்கிலாந்தும், பெல்ஜியமும் தலா 6 புள்ளிகளை எடுத்துள்ளன.

– சரவணன்

Leave a Response