பெங்களூர் தக்காளியை புறக்கணிப்போம் நாட்டுத்தக்காளியை நாடுவோம்

தொலைத்தவை என்னென்ன என்று தெரியாமலே தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறோம்!
இழந்தவற்றின் அருமை தெரியாமலே இறப்பை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம்.

விஞ்ஞானத்தின் விஸ்வரூப வளர்ச்சி இன்னும் என்னென்ன விபரீதங்களை கொடுக்கவுள்ளனவோ…!

பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் பார்க்க முடிந்த நாட்டுத் தக்காளி இப்போது மிகவும் அரிதானதாகிவிட்டது. அன்னஞ்சி நாட்டுத்தக்காளி, மஞ்சள் காட்டுத்தக்காளி, சிவப்பு காட்டுத்தக்காளியெல்லாம் இந்த தலைமுறைக்கே தெரியாத அபூர்வ பொருளாகிவிட்டது.

1980களில் நான், என் சொந்த ஊரான வத்தலக்குண்டு போகும்போது மெயின்ரோட்டின் ஒரு புறமெங்கும் தக்காளி மண்டிக் கடைகளும், அதன் முகப்பில் விவசாயிகள் மாட்டுவண்டியில் வந்து இறக்கிவைத்த தக்காளிகளுமாக சந்தை அப்படி களைகட்டி இருக்கும்…..!
இப்போது இந்த கட்டுரை எழுதும்போது வந்த ஞாபகத்தில் ஊரிலுள்ள ஜெயசந்திரன் அண்ணனுக்கு போன் போட்டு கேட்கிறேன். அவர் சொன்ன தகவல்கள் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தன.

“இப்ப எங்கப்பா… தக்காளி சந்தையே தலைகீழ்மாற்றமாயிருச்சே. ஹைபிரிட் தக்காளி வந்ததுல இருந்து, தக்காளி சந்தையே கந்தையாயிடுச்சு. முன்னெல்லாம் தினசரி விவசாயிகள் நாட்டுத்தக்காளியை கொண்டுவருவாங்க. அன்ணன்னைக்கு உடனே சென்னைக்கு ஏத்தி அனுப்புவோம். இப்ப எல்லாம் ஹைபிரிட் தக்காளி வந்ததில் இருந்து 3 நாளைக்கு ஒரு முறை தான் தக்காளிபோகுது…! பழைய நாட்டுதக்காளி கண்ணுக்கே தட்டுப்படறதில்ல.. முற்றிலும் வழக்கொழிந்துவிட்டது.”

தமிழகத்தின் முக்கிய தக்காளி சந்தைகளான திண்டுக்கல் – ஓட்டன்சத்திரம், சேலம் – வாழப்பாடி, கிருஷ்ணகிரி – ராயக்கோட்டை என எல்லா சந்தைகளிலுமே ஹைபிரிட் தக்காளிகளின் ஆதிக்கம் தான் கோலோச்சுகிறது. தமிழகத்தில் 3 லட்சம் ஹெக்டேரில் தக்காளி விலைவிக்கப்படுகிறது. இதில் 90 சதவிகதிதத்திற்கும் அதிகமாக வீரிய ஒட்டுரக தக்காளிகள் தான் விளைவிக்கப் பபடுகின்றன.

நாட்டுத்தக்காளியின் ருசிபார்த்திருக்கிறீர்களா? லேசான ஒரு புளிப்புச்சுவை அதனுடன் இனிப்புச்சவை! அறுத்தால் இருபுறமும் திரண்டிருக்கும் சதைப்பகுதியில் ஓட்டிக்கொண்டிருக்கும் விதைகள், மெல்லிசான தோல், சற்று அழுத்தி பிடித்தாலோ, கீழே தவறி விழுந்தாலோ உடைந்துவிடும். இரண்டு நாட்களில் அழுகிவிடும். அழுகினால் புழுபூச்சிவரும்.

நாட்டுத்தக்காளியில் வைக்கப்படும் குழம்புச்சுவை சொல்லிமாளாது. சாம்பாராகட்டும், ரசமாகட்டும் அதில் தக்காளியை போட்டவுடன் வரும் வாசனை பக்கத்துவீடு வரை பரவும், தக்காளி இருந்தால் புளியே தேவைப்படாது. பக்குவமாக சமைக்கத் தெரிந்தவர்கள் நாட்டுத் தக்காளியை தண்ணி ஊற்றி பிசைந்து, விதைகளை வடிகட்டி எடுத்துவிட்டு சமைப்பார்கள். நாட்டுத் தக்காளிக்கென அரும்பெரும் மருத்துவ குணங்கள் இருந்தன.

நாட்டுத்தக்காளி புற்றுநோய் கண்டவர்களின் பொக்கிஷமாகப் பார்க்கப்பட்டது. அதன் விதைகளை நீக்கி பச்சையாக அதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கேன்சர் கட்டுப்படும். நாட்டுத்தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்பட்டது. அன்றைக்கு அடிக்கடி வீடுகளில் தக்காளி ஜுஸ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பானமாக தரப்பட்டது.

வெரிகோஸ் நோய் கண்டவர்கள் நாட்டுத் தக்காளியை ஒரு ஸ்பூன் தேனுடன் சாப்பிட்டு வந்து, சில நாளில் குணமடைந்த செய்திகளை சிறுவயதில் கேட்ட ஞாபகம் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.

அடாடா….. அப்படிப்பட்ட அருமையான தக்காளி ரகங்களை இன்று காணமுடியவில்லையே! இன்று சந்தையில் நாம் பார்க்கும் ஹைபிரிட் தக்காளி முதலில் பெங்களூர் தக்காளி என்பதாக 1994 ல் அறிமுகமானது. ‘பிளார் சவார்’ என்பது இதன் அறிவியல் பெயர். கலிபோர்னிய நிறுவனத்தின் கண்டுபிடிப்பு. இதை ஆரம்ப காலங்களில் யாரும் சீண்டவில்லை.

ஏனென்றால், இதில் ருசியில்லை. சப்பென்று இருந்தது. சாறு நிறைய கிடைக்காது. வாசனையற்றது. தோல் தடினமாக இருந்தது. இந்த காரணங்களால் அன்று மக்கள் ஏற்கவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் கார்பரேட் நிறுவனங்கள் பின்வாங்கவில்லை. மெல்ல, மெல்ல அரசாங்கத்திற்குள் தங்களுக்கான ஆதரவாளர்களை உருவாக்கினர். வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களை விட்டு வைக்கவில்லை. விவசாய பல்கலைக்கழகங்களும் அவற்றின் வலையில் வீழ்ந்தன.
விவசாயிகளிடம் விதவிதமான பெயர்களில் ஹைபிரிட் தக்காளி அறிமுகமானது. கோ.டி.எச் -1 1998 ல் அறிமுகமானது. கோ.டி.எச் – 2,2006 ல் அறிமுகமானது. என்.பி.5005 நாட்டுரக ஹைபிரிட் கொடி தக்காளியும் சமீபத்தில் அறிமுகமானது.

2009ல் நமது மத்திய அரசு, மரபீனி மாற்று தொழில் நுட்பத்தை இந்தியாவில் அனுமதிப்பதாக அறிவித்தது. இதனால் பெரும் கொந்தளிப்பு உருவானது. ஆகவே பின்வாங்குவது போல மத்திய அரசு போக்குகாட்டியது என்றாலும், களத்தில் அரசு நிறுவனங்கள், விதைகளை அறிமுகப்படுத்திய கார்பரேட் நிறுவனங்களோடு கைகோர்த்தன. நேரடியாக மரபீனி மாற்றுவிதை என்றால் எதிர்ப்பு என்பதால் “இவை ஹைபிரிட் தான் தவறில்லை” எனச் சொன்னார்கள். ஆனால், சத்தஸ்கர் அரசும் சிக்கி மாநில அரசும், கேரள அரசும் இன்று வரை வீரிய ஒட்டுரக, மரபீனி மாற்றுப் பயிர்களை ஏற்கவில்லை. நமது தமிழகத்திலோ எந்த தடையுமில்லை.

விவசாயிகளை பயிரிடவைக்கவும், நுகர்வோர்களை வாங்க வைக்கவும் நூதனமுறைகள் கையாளப்பட்டன!
“அதிகவிளைச்சல் தரும், பூச்சி தாக்காது, உடனே கெட்டு விடாது. எனவே தங்கிவிட்டாலும் வீணாகாது, அடுத்தநாளுக்கு விலைபோகும்….” என்று ஆசைகாட்டி திணித்தனர்.

முதலில் இதை பயிரிட்டபோது ஹெக்டேருக்கு 30 டன்களுக்கும் அதிகமாக கிடைத்தது. இதற்கு இயற்கை உரம் ஏற்கவில்லை. அதனால் ரசாயன உரம் வாங்கவேண்டியதாயிற்று. பூச்சிமருந்துகள், களைகொள்ளிகள் தேவைப்பட்டன. செலவு கூடியது. நாட்டுத்தக்காளி விதைப்பில் இயற்கை உரம் போதுமானதாயிருந்தது. விதை காசுகொடுத்து வாங்கத் தேவையில்லை விவசாயிடமே விதை இருந்தது.
கணக்குப்போட்டு பார்த்தால் நாட்டு தக்காளி விதைப்பில் தான் நல்ல லாபம் பார்க்க முடிந்தது. சரி, இப்போது பழைய நாட்டுத் தக்காளி சாகுபடிக்கே மாறலாம் என்றால் நுகர்வோர் ரசனை இன்று மாறிவிட்டது. அவர்கள் வீரிய ஓட்டுரக தக்காளிக்கு பழகிவிட்டனர். தோளின் பளபளப்பு, நிறம், 15நாட்களானாலும் கெட்டுப்போகாத தன்மை, தவறித் தரையில் விழுந்தாலும் உடையாத உறுதி….ஆகியவற்றுக்குத்தான் இன்றைய நுகர்வோர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனபோதிலும் பாரம்பரியத்தை விடக்கூடாது என்று பொள்ளாச்சி சற்றுவட்டார பகுதி விவசாயிகள் நாட்டுத்தக்காளியை விளைவித்தது உள்ளூர் சந்தைக்கு கொண்டு வந்தால், நாட்டுத்தக்காளி கிலோ ரூ5 க்கு விலை போனது. ஆனால், பெங்களூர் தக்காளி 18 க்கு விலைபோனது. 5 ரூபாய்க்கு கொடுத்தாலும் மக்கள் நாட்டுத்தக்காளி வாங்க ஆர்வம் காட்டாமல் பெங்களூர் தக்காளியை வாங்கிச் சென்றதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இது சமீபத்திய நிகழ்வு.

நாட்டுத்தக்காளி தான் நலம் தரும். அதில் தான் கேன்சரைத் தடுக்கும் லைக்கோபின் உள்ளது. நிகோடினிக் அமிலம் என்ற ஆண்டி ஆக்சிடெண்ட்டான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. நாட்டுதக்காளியின் தோல் பளப்பளப்பின்றி இருக்கலாம். ஆனால் அது நம் தோலின் பளப்பளப்புக்கு உத்திரவாதமாகும். ரத்ததத்தை சுத்திரிகரிக்கும். சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.

மேற்கூறப்பட்ட அத்தனை நலன்களையும் வீரிய ஓட்டுரகதக்காளிகளில் எதிர்பார்க்கமுடியாது. மாறாக நம் அது நம் உடல்நலனுக்கு உகந்ததுமல்ல. இதற்கு முக்கிய காரணம் இயற்கைக்கு மாறானது. மனிதனின் வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. முதலாவாதாக விதைகளையே ரசாயன கரைசல் கொண்டு தான் பக்குவப் படுத்துகிறார்கள். இதில் ரசாயன உரத்தின் கேடுகளும், பூச்சிகொல்லி மருந்தின் தீமைகளும் சேர்ந்து விடுகின்றன. நவீன கலாச்சாரத்தின் வில்லங்க முகம் விவசாயத்தில் தான் அகோரமாக வெளிப்பட்டு நிற்கிறது.

நமது பாரம்பரியத்தில் விதையை விலைக்கு விற்றதாகவோ, வாங்கியதாகவோ வரலாறே இல்லை. ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு கிராமமும் விதைகளின் களஞ்சியமாகத் திகழ்ந்தன. அந்தந்த பகுதியின் மண்வளம், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் தன்மைகள், கிடைக்கும் நீர்வளம், காற்று, வெப்பம் ஆகியவற்றைக் கொண்டு விதைகளும், பயிர்களும் விதவிதமாக விளைந்தன. ஒவ்வொரு ஊரிலும் தக்காளியோ, கத்திரியோ வெவ்வேறு விதமாக இருக்கும்.

கத்திரிக்காயில் மட்டுமே சுமார் 2000 ரகமான விதைகள் இருந்தன! பச்சை கத்திரி, நெகமம்வரி கத்திரி, உடுமலைசம்பா கத்திரி வெங்கேரி கத்தரி, கும்பகோணம் கத்திரி, திண்டுக்கல் ஊதா கத்திரி, மணப்பாறை கத்திரி, நந்தவன பச்சை கத்திரி, சீந்தம்பட்டி பொன்னி கத்திரி, பொய்யூர் கத்திரி, வெண்வரி உருண்டை கத்தரி…. இப்படி எத்தனையெத்தனை ரகம்…! ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணம், சுவை கொண்டது.
இன்று கிடைக்கும் கத்தரியெல்லாம் வீரிய ஓட்டுரக கத்திரி தானே!
இப்படியாக வெண்டைக்காய், மிளகாய் என ஒவ்வொரு பயிரிலும் பல ரகங்கள், பல குணங்கள் கொண்டவை அன்று கோலாச்சின.

விவசாயத்தின் அந்த பன்முகத்தன்மையை, இயற்கையின் மகோன்னதங்களை தொலைத்துவிட்டு, இன்று ஒரு சில வீரிய ஓட்டுரக விதைகளை மட்டுமே பயிர்விக்கும் விபரீதம் ஏற்பட்டு விட்டது.
முறையான திட்டமிடலோ, வழிகாட்டுதலோ இல்லாத காரணத்தால் விவசாயிகள் அதிக மகசூல் விதைகளை வாங்கி விதைத்து, சந்தையில் விலைபோகாமல் தெருவில் வீசியெறிந்துவிட்டோ அல்லது பறிக்காமலே செடியிலேயோ விட்டு விடுகின்றனர் மொத்தத்தில் வீரிய ஓட்டுரக தக்காளி விதைப்பால் நஷ்டப்பட்டு காணாமல் போன விவசாயிகள் கணக்கிலடங்காது. அதேசமயம் இதில் லாபம் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், செலவு செய்ய தகுதியானவர்கள் தான் இன்றைய நவீன விவசாயத்தில் தாக்குபிடிக்க முடியும்.

நாட்டுவிதைவிதைப்பிலும், பயிர்பராமரிப்பிலும், மகசூலிலும் செலவே இல்லை. அன்றெல்லாம் எந்தச்செடியில் காய்கறி சிறப்பாக இருக்கின்றனவோ அதை முத்தவிட்டு, விதையை எடுத்து சாணத்தில் புதைத்து பக்குவப்படுத்துவர். வைக்கோலில் இறுக கட்டிவைத்து பருவம் வந்ததும் எடுத்து விதைப்பார்கள்.
பசுந்தாள் உரமாக சணப்பை போடுவார்கள்!
வைரஸ் தாக்குதலைத் தடுக்க சோளச்சாறு, தேங்காய்பால் சாறு தெளிப்பார்கள். பூச்சிகளை விரட்ட வேப்ப எண்ணெய், வேப்ப விதைச்சாறு பயன்படுத்துவார்கள். நாற்று அழுகலை கட்டுப்படுத்த கோதுமை தவிடு, மக்கிய மண் போதுமானதாயிருந்தது.

இன்றென்ன நிலைமை..? எவ்வளவு தீமையான ரசாயனங்கள் பயன்படுகின்றன…? பயிரை வளர்க்கிறோம் என்று கூறி நம் உயிரையே சிறுகச்சிறுக இழந்து கொண்டிருக்கிறோம்.

“விவசாயத்தில் தழைத்தோங்க நம் பாரம்பரிய விதைகளே பேராயுதம் என்பார் நம்மாழ்வார் ஐயா!

விலைமதிப்பில்லாத பொக்கிஷங்களாக நம்மிடையே இருந்த விதை வளங்களை நாம் தொலைத்துவிட்டு இன்று விதை கம்பெனிகளிடம் கையேந்தி நிற்கிறோம்.
ஆரம்பத்தில் சல்லிசான விலைக்கு தரப்பட்ட வீரிய ஓட்டுரக கவிதைகள் இன்று சமானியர்கள் நினைத்து பார்க்க முடியாத விலைக்கு விற்கப்படுகின்றன.

வெண்டைவிதை கிலோ ரூ 2000
புடலைவிதை கிலோ ரூ 8000
தைவான்வகை பப்பாளிவிதை ரூ ஒரு லட்சம்!

ஆனால், நாட்டு விதைகளின் விலைகளோ இதில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. தொலைந்துபோன விதைகளை தேடிக்கண்டடைந்து மீண்டும் விவசாயிகளுக்கு அதை கொடுக்கும் புண்ணியச்செயலை சில இயற்கை ஆர்வலர்கள் இடையறாது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை தேடி கண்டடைந்து பாரம்பரிய விதைகளை பயிர்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு
ஆரோக்கியமாக வாழவிரும்பும் அனைவருக்கும் உள்ளது தானே! அந்த உயரிய நோக்கமுள்ளவர்களுக்கு உதவியாக நாட்டுவிதைகளை தரும் நல்லோர் சிலரின் தொலைபேசி எண்களைத் தருகிறேன். பயனடைந்து கொள்வீர்கள் என்பதற்காகவல்ல. வாழும் சமூகத்தை பயடைய வைப்பீர்கள் என்பதற்காகவும் தான்!

சா.யோகநாதன் – 9442816863 (முசிறி அருகே திருநெற்குன்றம்)
அ.பரமேஷ்வரன் – 8526366796 (ஒட்டன் சத்திரம்)
ஜனதான்யா – 9449861043 (பெங்களூர்)
குருசாமி – 09008167819 (சாம்ராஜ்நகர் – கர்நாடகா)
அழகேஸ்வரி – ‘இயல்வாகை’ – ஊத்துகுளி – 9500125126
‘பசுமை’உமாநாத் – 9025776699 – டிரஸ்ட் 1-2-1 சென்னை
விசிஷ்டாவிதைவங்கி – புத்திர கவுண்டன் பாளையம் – சேலம்
காய்கறி ஆராய்சி மையம் – பாலூர் – பண்ரூட்டி அருகே!
உழவர் மன்றம் – பொள்ளாச்சி வடக்கு
வானகம் – சுருமான்பட்டி, கடவூர் அஞ்சல், கரூர்மாவட்டம்

சாவித்திரிகண்ணன் எழுதி ஜூன் 15 2018 மண்வாசனையில் பிரசுரிக்கப்பட்டது.

Leave a Response