
நிறம், காந்தர்வன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த கதிர் இப்போது கதாநாயகனாக நடிக்கும் புதியபடம் ஒன்பதிலிருந்து பத்துவரை. பாக்யராஜ், கே,எஸ்.ரவிகுமார் ஆகிய இயக்குநர்களுடன் பணியாற்றிய விஜய்சண்முகவேல்அய்யனார் முதன்முறை இயக்கும் படம். இந்தப்படத்தில் மோகன்லால் படத்தில் நாயகியாக நடித்த ஸ்வப்னா இந்தப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். தமிழுக்குப் புதுவரவான இவர் இந்தப்படத்துக்குப் பிறகு தமிழில் நிறையப்படங்களில் நடிப்பார் என்று சொல்கிறார்கள்.
ஒன்பதிலிருந்து பத்துவரை என்பது நேரமா வயதா என்பதை இப்போது சொல்லமுடியாது ஏனென்றால் அதில்தான் கதையே இருக்கிறது என்கிறார் இயக்குநர். காந்தர்வன் படத்தில் சுமையுந்து ஒட்டுநராக (லாரி) நடித்த நாயகன் கதிர், இந்தப்படத்தில் வாடகை மகிழுந்து (டாக்சி) ஓட்டுநராக நடித்திருக்கிறார்.
நாயகனின் வாடகைஉந்தில் சென்னையிலிருந்து காஞ்சிபுரம், அங்கிருந்து மீண்டும் சென்னை வரை பயணம் செய்கிறார் நாயகி. அந்தப்பயணத்தின் போது இவர்களைக் காவல்துறை துரத்துகிறது அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் இந்தப்படம் என்கிறார்கள்.
முதல்பாதியில் நிதானமாகப் போகும் திரைக்கதை இரண்டாம்பாதியில் படுவேகமாகப் போகும், ஒவ்வொரு ஐந்துநிமிடத்திலும் ஒரு திருப்பம் ஏற்படும், மொத்தத்தில் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்று சொல்கிறார் இயக்குநர்.
இந்தப்படம் தன்னை ஒரு முழுமையான கதாநாயகனாக நிலைநிறுத்தும் என்று நம்புகிறார் நாயகன் கதிர். இந்தப்படத்தின் நாயகியை நாயகன் கதிர்தான் பரிந்துரைத்தார் என்று சொல்லப்படுகிறது, அதை உடனடியாக கதிர் மறுத்துவிட்டார் என்றாலும் அதுதான் உண்மை என்றும் ஒருகதை இருக்கிறது. ஒன்பதிலிருந்து பத்துவரை என்பது சுபமுகூர்த்தநேரமாக இருந்தாலும் நல்லதுதான்.
