ஐபிஎல் – பெங்களூரூவை துரத்தியது ராஜஸ்தான்

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் ரஹானே, பேட்டிங்கை தேர்வுசெய்தார்.

இந்தப் போட்டியில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் இல்லாமல் ராஜஸ்தான் அணி களம் கண்டது. இதையடுத்துக் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.

தொடக்க வீரர் ராகுல் திரிபாதி, ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் சேர்த்தார். ரஹானே 33 ரன்களும், கிளாசன் 32 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் அணி தரப்பில், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இன்றைய போட்டியில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் 165 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது.

அணித்தலைவர் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு பார்த்திவ் படேலுடன் ஜோடி சேர்ந்த டிவிலியர்ஸ், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் பார்த்திவ் படேல் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மொயின் அலி, மன்தீப் சிங், கிராண்ட்ஹோம் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, பெங்களூர் அணி 12 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த டிவிலியர்ஸும், 53 ரன்களில் நடையைக் கட்ட, பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்பு ஏறக்குறைய கைநழுவியது. பின் வரிசை வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ராஜஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால், 19.2 ஓவர்களில் 134 ரன்களில் ஆட்டமிழந்தது.

30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது.

Leave a Response