ஐபிஎல்- அதிரடி ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்திய பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது.

துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிரித்வி ஷா(2 ரன்கள்) தாக்கு பிடிக்கவில்லை. ஜோசன் ராய் 12 ரன்களில் வெளியேறினார். மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 32 ( 35 பந்துகள்), ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.

ரிஷாப் பண்ட் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் விளாசிய ரிஷாப் பாண்ட் 61 ரன்கள் ( 34 பந்துகள்) டி வில்லியர்சின் பிரம்மிக்கத்தக்க கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார். கடைசி கட்ட ஓவர்களில் அபிசேக் சர்மா ( 46 ரன்கள், 19 பந்துகள் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) அதிரடி காட்ட டெல்லி அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.

பெங்களூரு அணி தரப்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சகால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்தீவ் படேல், மொயின் அலி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுக்க பெங்களூரு அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்ததாக விராட் கோலியுடன், டி வில்லியர்ஸ் கை கோர்த்தார். இருவரும் இணைந்து டெல்லி அணியினரின் பந்து வீச்சை துவைத்து எடுத்தனர்.

கோலி மற்றும் டி வில்லியர்ஸின் அதிரடியால் திக்குமுக்காடிய டெல்லி அணியினரின் செய்வதறியாது குழம்பி போய் பந்து வீச ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பெங்களூரு அணியின் ரன் வேகமும் ராக்கெட் வேகத்தில் உயர, ஒரு வழியாக 13.2-வது ஓவரில் அமித் மிஸ்ரா வீசிய பந்தில் கேப்டன் கோலி (70 ரன்கள்) அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய மன்தீப் சிங் (13 ரன்கள்), சர்பராஷ் கான் (11 ரன்கள்) எடுத்து வெளியேறினாலும், மறுமுனையில் ஆடிய டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி 19-ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்த டி வில்லியர்ஸ் 72 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) குவித்தார். இதன் மூலம் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

டெல்லி அணியின் தரப்பில் டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும், ஹர்சால் படேல், அமித் மிஸ்ரா மற்றும் சந்தீப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Leave a Response