ரஜினி எப்படி நல்லவராக இருக்கமுடியும்? – கல்லணையில் சீமான் விளாசல்

திருச்சி கல்லணையில் ஏப்ரல் 27 ஆம் நாள் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரி மீட்பு ஒன்றுகூடல் போராட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமைதாங்கினார்.போராட்டத்தில், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கீரா, வெற்றிமாறன், கவுதமன், வீ.சேகர், யார் கண்ணன் மற்றும் நடிகர் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சீமான், தனியரசு ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சீமான்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபிறகும், இழுத்தடித்த மத்திய அரசு, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டது. அதேபோது இன்று மத்திய அரசு கூடுதலாக 2 வார அவகாசம் கேட்டிருப்பது, கர்நாடகத்தில் தேர்தலை நடத்திமுடிப்பதற்காகதான். அதன்பிறகும் வாரியம் அமைக்குமா என்பதும் சந்தேகமே. மத்திய அரசு தமிழர்களை வஞ்சித்து ஏமாற்றுகிறது.

காவிரிக்காகப் போராடிய கடலூர் திலீபன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காலம் மாறும், அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். அப்போது திலீபனுக்கு இந்தக் காவல்துறையினர் பணியும் காலம்வரும். காவிரிக்காகப் போராடினோம் ஒன்றும் நடக்கவில்லை. நாம் தமிழராய் இணைந்த விக்னேஷ் தீக்குளித்துச் செத்தான் திரும்பி பார்க்கவில்லை. இப்போது பலர், சீமான் பேசிப் பேசி உணர்ச்சிகளைத் தூண்டி விட்டார் என்கிறார்கள். தமிழர்கள் உணர்ச்சியற்று இருக்க வேண்டும் என நினைக்கிறது இந்த அரசு.

பசிக்காக ரொட்டித்துண்டை திருடிய மதுவை அடித்தே கொன்றார்கள். கேட்க நாதியில்லை. கோடி கோடியாய் கொள்ளையடித்து விட்டு வெளிநாடு தப்பிச் சென்றாரே நீரவ் மோடி, அவருடன் முதல்வர் படம் எடுத்துள்ளார். அவர் கைது செய்யப்படுவாரா, திலீபனைக் கைது செய்த காவல்துறையால், எஸ்.வி.சேகரைக் கைது செய்ய முடியவில்லை.

தமிழனுக்குக் கொஞ்சம் காலதாமதமாகத்தான் வலிக்கும். பட்டினிப் போராட்டம் நடத்தும் கட்சிக்காரர்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். இனி பட்டினிதான் கிடக்க வேண்டும். ஒரு குடம் தண்ணீர் ஐம்பது ரூபாய் தந்து வாங்குகிறோம். ஆனால் இனிவரும் காலங்களில் தருவதற்காகத் தண்ணீர் இல்லை என்பார்கள். நாம் பாட்டில் தண்ணீரைக் குடித்தால், மற்ற உயிரினங்கள்.எங்குப் போகும் தமிழகம் பாலைவனமாகிக் கொண்டுள்ளது.

காவிரியில் தண்ணீர் கேட்டுப் போராடுகிறோம். ஆனால் கேட்க நாதியில்லை. ஆனால் தஞ்சாவூருக்கும், சேலத்துக்கும் விமானநிலையம் எதற்கு? இதன் பின்னணியில் பன்னாட்டுச் சதி உள்ளது. இதற்காக 331லட்சம் கோடி ஏசியன் வங்கி கடன் கொடுத்துள்ளது. வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள் இந்த ஒப்பந்தங்களை எடுக்கின்றன.

இந்தத் தேசத்தின் கனிம வளத்தை ஏற்றுமதி செய்துவிட்டு, வெங்காயத்தையும் பருப்பையும் இறக்குமதி செய்வார்கள். அதுதான் இந்த நாட்டின் முன்னேற்றமா,?விரைவில் உலகின் பசுமை நாடாக விளங்கிய சோமாலிய நாடு இன்று பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது. அதைப்போல தமிழ்நாடு ஆகும்.

நாம் பொழுதுபோக்குக்காகப் போராட வரவில்லை. ஐ.பி.எல் போட்டிக்குப் போராடினால் காவிரி வந்திடுமா என்கிறார்கள். இப்படி பேசுபனை எல்லாம் மொத்தமாக வைத்து கொழுத்தனும். கனிம வளங்கள் எங்களுக்கே எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வேண்டும்.

ரஜினி நிறைய நல்லவர் என்கிறார்கள், அடுத்தவன் துயரத்துக்கு இரங்காதவன் எப்படி நல்லவன் ஆக முடியும். ரஜினியால், நெடுவாசல்,கதிராமங்கலம் குறித்துப் பேச முடியுமா, இமயமலைக்குப் போனோமா, ஸ்வெட்டரை போட்டோமான்னு இருக்கனும். தலைமை என்பவன் கிரீடம் சுமப்பவன் இல்லை.தழும்புகளை சுமப்பவன். அந்த தலைமைப் பண்பு தங்களிடம் இல்லை.

மோடி வந்தால் நல்லகாலம் பிறக்கும் எனப் பேசியவர்கள் இப்பொழுது ஓடி ஒளிந்து கொண்டார்கள். பி.ஜே.பி மட்டுமல்ல தேசியக் கட்சிகள் நமக்கானது இல்லை. காவிரி விவகாரத்தில் ராகுல்காந்தி நிலைப்பாடு என்ன.? ஒரு சொட்டு தண்ணீர் தமிழர்களுக்கு இல்லை என்றால், தேசியக் கட்சிகளுக்கு ஒரு ஓட்டுக்கூட அவர்களுக்கு இல்லை என்பதை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response