சென்னையில் பரபரப்பு – ஓடும் தொடர்வண்டியில் இளம்பெண் மீது வன்முறை

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், வேளச்சேரியில் இருந்து ஏப்ரல் 23 அன்று இரவு 11.45 மணிக்கு கடற்கரை நோக்கி வரும் பறக்கும் மின்தொடர்வண்டியில் வந்து கொண்டிருந்தார்.

அவர் பயணித்த பெட்டியில் ஒரு சில பயணிகளும் இருந்தனர்.வண்டி சேப்பாக்கம் வந்தடைந்ததும், இதர பயணிகள் இறங்கினர்.அந்தப்பெண் மட்டுமே அந்தப் பெட்டியில் இருந்திருக்கிறார். அப்போது அந்தப் பெட்டியில் வாலிபர் ஒருவர் ஏறினார்.

வண்டி சிந்தாதிரிப்பேட்டையில் நின்று புறப்பட்டபோது இளம்பெண் மீது வாலிபர் திடீரென பாய்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், ‘காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்’, என கூச்சலிட்டார்.

ஓடும் தொடர்வண்டியில் பெண்ணின் அபாயக் குரலைக் கேட்டு, அதே வண்டியில் மற்றொரு பெட்டியில் பயணித்த ரெயில்வே பாதுகாப்புப்படை காவலர் சிவாஜி அதிர்ச்சி அடைந்தார்.

பார்க் டவுன் நிலையம் அருகே வந்த போது வண்டியின் வேகம் குறைந்தது. இதைப் பயன்படுத்தி, தான் இருந்த பெட்டியில் இருந்து குதித்து பெண்ணின் சத்தம் வந்த பெட்டியில் சிவாஜி தாவி ஏறினார்.

அங்கு ஒரு இளம்பெண்ணை, வாலிபர் துன்புறுத்துவதைப் பார்த்து சிவாஜி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைத்தார். எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போன அந்த வாலிபர் பெட்டியில் சரிந்து விழுந்தார். அதேநேரம் உதடு மற்றும் முகத்தில் காயம் அடைந்த பெண்ணும் மயக்கநிலைக்குச் சென்றார்.

தொடர்வண்டி, கடற்கரை நிலையத்தை வந்தடைந்ததும் இளம்பெண்ணையும், அந்த வாலிபரையும் கடற்கரை ரெயில்வே பாதுகாப்புப்படை காவல்துறையிடம் சிவாஜி ஒப்படைத்தார்.

உடனடியாக அந்தப்பெண்ணை, பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளர் சுப்பையா ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

ஓடும் தொடர்வண்டியில் இளம்பெண்ணை பாலியல்வன்புணர்வு செய்ய முயற்சி செய்த வாலிபர் பெயர்சத்தியராஜ் (26) என்பதும், எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

வேளச்சேரி லட்சுமிபுரத்தை சேர்ந்த அவர், எழும்பூர் ரெயில்வே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து எழும்பூர் ரெயில்வே காவல் ஆய்வாளர் ரோஜா, சத்தியராஜ் மீது வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று காலை எழும்பூர் ரெயில் நிலையம் வந்தார். சரியான நேரத்தில் இளம்பெண்ணைக் காப்பாற்றிய பாதுகாப்புப்படைக் காவலர் சிவாஜியை கட்டிப்பிடித்து வாழ்த்தினார். மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினார்.

Leave a Response