பெட்ரோல் டீசல் விலையில் நாள்தோறும் கொள்ளை – மக்கள் கடும் அவதி

மாதம் ஒருமுறை விலையேற்றம் இருந்தபோது பளிச்செனத் தெரிந்தது. இப்போது நாள்தோறும் விலையேறிக் கொண்டேயிருக்கிறது.அது தெரிவதில்லை.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலை மாதம் இருமுறை என மாற்றி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய தொடங்கின.

அதன்பின் நாள்தோறும் சில காசுகள் அளவுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டபோதிலும், அது மாதம் முழுவதும் மொத்தமாகப் பார்க்கும் போது, விலை உயர்வு அதிகமாக இருந்தது. அதிரும் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலையில் அதிகமான உயர்வு இருந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. நாள்தோறும் பெட்ரோல், டீசலுக்கு அதிகமான விலையையே மக்கள் அளித்து வருகின்றோம் என புலம்புகின்றனர்.

சென்னையில் டீசல் ஒரு லிட்டர் ரூ.69.27 காசுகளுக்கும், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.19 காசுகளுக்கும் இன்று விற்பனையாகிறது. கடந்த 20-ந்தேதியில் இருந்து இன்று வரை பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 34 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல டீசலில் லிட்டர் ஒன்றுக்கு 37 காசுகள் அதிகரித்துள்ளது.

சென்னையில் கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77க்கு விற்பனையானது. அதன்பிறகு, 6 ஆண்டுகளுக்குப் பின் ரூ.77க்கு மேல் தற்போது உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உள்மாவட்டங்களில் இந்த விலையோடு போக்குவரத்துச் செலவையும் சேர்க்கும் போது மேலும் அதிகரிக்கலாம்.

கண்ணுக்குத் தெரியாமல் நாள்தோறும் நடக்கும் அப்பட்டமான கொள்ளை என்று மக்கள் கொதிக்கின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

Leave a Response