ஏப்ரல் 14,2018 அன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலுமகேந்திரா நூலகம் தொடக்கவிழா நடைபெற்றது.
நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி எழுத்தாளர் பாமரன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
உதவி இயக்குநர்களிடையே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சென்னை சாலிகிராமம், எண் 1, திலகர் தெருவில் எழுத்தாளர் அஜயன்பாலா இந்த பாலுமகேந்திரா நூலகத்தை துவக்கியிருக்கிறார்.
தொடக்க விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ்,
கடலோரக்கவிதைகள் படத்தைப் பார்த்து விட்டு சிவாஜி என்னை அடுத்த பத்து வருடங்களுக்கு உன்னை யாரும் அசைச்சிக்க முடியாது என்றார் வேதம் புதிது பார்த்துவிட்டு எம் ஜி ஆர் கையைப்பிடித்து முத்தம் கொடுத்தார் ஓன்பது ரூபாய் நோட்டு பார்த்துவிட்டு பாலுமகேந்திரா கட்டிப்பிடித்துக் கண்கலங்கிப் பாராட்டினார்.
அஜயன்பாலா எழுதிய மார்லன் பிராண்டோ புத்தகம் வாசிச்சப்புறம்தான் மொழி தெரியாத படங்களிலும் நடிக்கலாம் என தெரியவந்தது. அதுவரை நடிக்க மறுத்த தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்து சம்பாதிச்சேன். அதுக்குக் காரணமாயிருந்த அஜயன்பாலா உருவாக்கியிருக்கிற இந்த நூலகத்துக்கு பெரிசா உதவணும்னு நெனக்கிறேன் கூடியவிரைவில் அதை அவரோட பேசி அறிவிப்பேன் என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன், நூலகம்ங்கிறது வெறும் படிக்கிறதோட இல்லாம அறிவுப்பகிரல். பலரும் தங்களுக்குள்ள ஷேர் பண்ணிக்கும் போது அது ஆரோக்கியமான சமூகத்தை வளர்க்குது. இன்னைக்கு அது அவசியம் என்றார்.
இயக்குநர் ராம் பேசும்போது, நன்றாகப் படித்தால்தான் நாம் மதத் தீவிரவாதியாகாமல் பாலியல் வன்முறையில் ஈடுபடாமல் இருக்க முடியும். பால் தாக்கரேவை தலைவனாகக்கொண்ட ஆன்மீக அரசியலில் ஈடூபடாமல் இருக்கமுடியும் என்றார்.
தொடர்ந்து பேசிய எழுத்தாளர் பாமரன், நானும் ஆரம்பத்தில் நூலகம் துவக்கினேன் ஓருவரும் வரவில்லை பிற்பாடு அது டாஸ்மாக் ஆனபோது கூட்டம் முண்டியடித்தது. இந்த நிலை பாலுமகேந்திரா நூலகத்துக்கு வரவிடாமல் பாதுகாக்க வேண்டியது உங்கள் ஓவ்வொருவரின் கடமை என்றார்.
தொடர்ந்து இயக்குநர் ஏ.எல்.விஜய், ரோகிணி, மீரா கதிரவன், நாச்சிமுத்து ஆகியோர் பேச அஜயன்பாலா அனைவருக்கும் நன்றி கூறினார்