என்னைக் கைது செய்யுங்கள், என் கட்சியினரைக் கைது செய்யாதீர்கள் – சீமான் ஆவேசம்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராகக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக நாம் தமிழர் கட்சி தமிழகத்தின் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் அறவழி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10 அன்று சென்னை, அண்ணா சாலையில் ஐபில்(IPL) கிரிக்கெட் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பொய்யாகப் புனையப்பட்டுச் சிறைபடுத்தும் போக்கு நடைபெற்றுவருகின்றது. கடந்த 4 நாட்களில் தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்னறிவிப்பின்றிப் பொய் வழக்குகளில் கைது செய்து சிறைப்படுத்தப்பட்டுவருகின்றனர்.

இது தொடர்பாக இன்று 14-04-2018 (சனிக்கிழமை) மாலை 04 மணியளவில் சேப்பாக்கத்திலுள்ள ‘சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்’ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது….
ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தின்போது, காவலர்களைத் தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் இல்லை. காவலர்களைத் தாக்கியது தவறு; போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறு.தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர்.

நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல; போலீசாரை தாக்குவதற்குத்தான் நாங்கள் கட்சி நடத்திக் கொண்டுருக்கிறோமா?. காவிரிக்காக ஐபிஎல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினோம். போராட்டத்தில் திடீர் தாக்குதல் ஏற்பட்ட போது, நான் தாக்கியதாக திட்டமிட்டு கொலை முயற்சி செய்கிறோம் என்ற பொய் வழக்கு போடப்பட்டது.

யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதை காவல்துறை தான் கண்டறிந்து நடவடிக்கை வேண்டும். ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை. நாம் தமிழர் கட்சியினரை போலீசார் மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் நாம் தமிழர் கட்சியினரை குற்றவாளிகளாக்குவது தவறானது. போராட்டத்தின் போது போலீசை தாக்கியது யார் என்றே தெரியவில்லை.

அதனால் எங்கள் கட்சியினரைக் கைது செயய்வேண்டாம் என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள். காவல்துறைக்கு எதிரான கட்சி போல, நாம் தமிழர் கட்சி மீது குற்றம்சாட்டுவது தவறு இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response