
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்தும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்ற இளைஞர் தன்னைத் தானே தீக்கிரையாக்கி மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தமும் வேதனையுமுற்றேன்.
இரண்டாண்டுகளுக்கு முன் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை தம்பி விக்னேஷ் மரணித்துப்போனான். அவனை இழந்த வலியே இன்னும் போகவில்லை அதற்குள் இப்பொழுது தர்மலிங்கம். காவேரி பிரச்சனையை இத்தனை வருடமாக இழுத்தடித்துத் தற்பொழுது உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலந்தாழ்த்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளும் ஆளும் உயரத்தில் இருக்கும் கட்சிகளும் தான் வாழவேண்டிய இளைஞர்களை விரக்தியின் விளிம்பில் தள்ளி இப்படியான முடிவுகளை எடுக்கக் காரணமாகிறார்கள்.
அன்புத்தம்பிகளே.. நான் பலமுறை சொன்னது தான் நமது உரிமையை நாம் இருந்து தான் பெறவேண்டும். எது ஒன்றும் மறுக்கப்படும் பொழுது போராடித்தான் ஆகவேண்டும். அதற்கு நாம் உடல் ஆரோக்கியத்தோடும், மனதிடத்தோடும் இருத்தல் அவசியம் என்பதை உள்வாங்கிக்கொண்டு போராடுங்கள்.
அன்புத்தம்பி தர்மலிங்கத்திற்கு வீரவணக்கம்.
— சீமான்


