எங்களை ஆயுதம் தூக்க வைத்துவிடாதீர்கள் – அன்புமணி ஆவேசம்

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று (ஏப்ரல் 11,2018) கடையடைப்பு போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இன்று காலை, சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தொடர்வணி மறியல் போராட்டம் நடந்தது.

பா.ம.க.வினர் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் திரண்டனர். வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அருகில் இருந்து நிலையத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

போராட்டக்காரர்கள் நிலையத்தில் நுழையாமல் தடுக்க தடுப்பு வேலிகளை காவல்துறையினர் அமைத்து இருந்தனர்.

நிலையத்தின் முன் வாசலை முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்கள். காவிரி நீர் தராமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசே, மோடி அரசே உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

தடுப்புகளை மீறி உள்ளே சென்ற சிலர் தொடர்வண்டியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, நங்கள் மிகவும் பொறுமையாகவும் நியாயமாகவும் அறவழியில் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களை வேறு நிலைக்குத் தள்ளாதீர்கள். தமிழர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும், கடல் தாண்டி இருக்கும் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக எவ்வாறு போராடினார்கள் எனப்து எல்லோருக்கும் தெரியும். எங்களையும் அதை நோக்கித் தள்ளாதீர்கள் என்றார்.

விடுதலைப்புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடியதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு பேசினார். நாங்களும் அதுபோல் செய்வோம் என்று அவர் கூறியதற்கு பாமக தொண்டர்களிடையே பலத்த வரவேற்பு.

Leave a Response