தமிழக வளர்ச்சிக்காகப் பாடுபடும் எங்க ஊர் எம்பி – சத்யபாமா எம்பி க்கு தொகுதி மக்கள் பாராட்டு

திருப்பூர் தொகுதி எம்பி சத்யபாமாவின் குடும்பச் சிக்கல் தொடர்பாக அண்மையில் செய்திகள் வந்தன.விஐபிகள் பற்றி இது போன்றதொரு செய்தி வந்தால், கேட்கவே பொய்களும் கற்பனைகளும் ரெக்கைகட்டிப் பறக்கும்.அதுவும் அந்த விஐபி ஒரு பெண்ணாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.

ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, சத்யபாமாவின் கணவரே அவரைப் பற்றித் தவறாகச் சொன்ன போதும் அவற்றை அப்பகுதி மக்கள் முற்றாகப் புறக்கணித்துவிட்டனர். மாறாக அவரைப் பாராட்டிப் பேசுகின்றனர். கட்சி கடந்து பொதுமக்களால் நேசிக்கப் படுகிற அரசியல் தலைவராக அவர் உருவெடுத்திருக்கிறார்.

அவரைப் பற்றி சமூகச் செயற்பாட்டாளர் வா.மணிகண்டன் எழுதியுள்ள பதிவில்,

சில அதிமுக புள்ளிகளின் செயல்பாடுகளை பாராட்டிதான் தீர வேண்டும். திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா அப்படியான ஒரு ஆள். ‘எம்.பி ஆகிட்டா அவ்வளவுதான்..திரும்பிக் கூட பார்க்க மாட்டாங்க’ என்று நினைப்பதுதான் நம் வழக்கம். ஆனால் சத்யபாமா டெல்லியில் ஒவ்வொரு துறை அமைச்சரையும் சந்தித்து ஏதாவது ஒரு கோரிக்கையை முன் வைத்துக் கொண்டேயிருக்கிறார். கூடுதல் ரயில் வேண்டும் என ரயில்வே மந்திரியைச் சந்திக்கிறார். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கோரி ராணுவ அமைச்சரைச் சந்திக்கிறார். ஜி.எஸ்.டி சம்பந்தமாக நிதியமைச்சரைச் சந்தித்திருக்கிறார்.

செய்கிறார்களோ இல்லையோ- இவர் விடாமல் துரத்துகிறார். எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறையில் கொண்டு வர வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். ம்க்கும். அவர்களாவது கொண்டு வருவதாவது. ஆனாலும் பேச ஆள் இருக்கிறாரே என்று சந்தோஷமாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. தமது தொகுதிக்கு எதையாவது கேட்டு வாங்கி ‘பார்த்தீங்களா செஞ்சுட்டேன்’ என்று வாக்கு வாங்குகிற அரசியல்வாதிகளைத் தெரியும். மாநிலத்துக்காக கோரிக்கைகளை வைப்பதையெல்லாம் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.

சத்யபாமா எம்.பி குறித்து நிறையச் செய்திகள் உலவுவதுண்டு. எதிர்மறையான செய்திகள். இவரது செயல்பாடுகளையெல்லாம் பார்த்துவிட்டு உள்ளூர்வாசிகளிடம் விசாரித்தால் மற்ற அரசியல்வாதிகளைவிடவும் வித்தியாசமான அரசியல்வாதிதான் என்கிறார்கள். ‘எதிர் அரசியலில் ஆண்கள் என்றாலே சாணத்தை வாரி வீசுவார்கள். பெண் என்றால் கேட்க வேண்டுமா..அதுவும் குடும்பப் பிரச்சினை’ என்றார்கள். அது எப்படியோ போகட்டும். அரசியல் என்றிருந்தால் குற்றச்சாட்டுகள், வதந்திகள் இருக்கத்தான் செய்யும். நூறு சதவீதம் சரியான அரசியல்வாதியாக இருப்பதும் சாத்தியமில்லை. எல்லாவற்றையும் தாண்டி செயல்பாடுகள் முக்கியம். மக்களுக்காக இயங்குதல் வேண்டும். அவ்வளவுதான்.

மத்திய அரசின் ஏ.டி.ஐ.பி (Assistance to Disabled persons for Purchasing/Fitting Aids/Appliances) என்றொரு திட்டமிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான திட்டம் அது. ஆனால் பதிவு செய்து வைத்தால் வெகு காலம் பிடிக்கும். இப்படியொரு திட்டமிருப்பதைக் கண்டறிந்து மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் அவர்களைச் சந்தித்து விண்ணப்பம் கொடுத்திருக்கிறார் எம்.பி. திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு விரைவாக உதவியை வழங்கும்படி அமைச்சர் பரிந்துரை செய்திருக்கிறாராம்.

திருப்பூரைச் சேர்ந்த ரேவதி என்றொரு பெண்மணியால் நடக்க முடியாது. சக்கர வண்டி வாங்குவதற்காக உதவி கேட்டிருந்தார். ‘நேரில் வந்து இயன்றதைச் செய்கிறேன்’ எனச் சொல்லியிருந்தேன். தற்பொழுது அழைத்து ‘அண்ணா, கவர்ன்மெண்ட்டிலேயே வண்டி தர்றேன்னு சொல்லிட்டாங்க…அந்தப் பணத்தை வேற யாருக்காச்சும் கொடுதுங்கண்ணா’ என்றார். விசாரித்துப் பார்த்தால் எம்.பி. செயல்பட்டிருக்கிறார். பாராட்டுவதில் தவறொன்றுமில்லையே.

எனக்கு அவரோடு எந்த அறிமுகமுமில்லை. அழைத்தால் வருவாரா என்று தெரியவில்லை. ஆனால் புஞ்சை புளியம்பட்டி பள்ளியில் கடவுளின் குழந்தைகளுக்கு தொலைக்காட்சி வழங்க அவரையே அழைத்துவிடலாம் என்று தோன்றுகிறது. மார்ச் 31 சனிக்கிழமை. காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அரை நாள் குழந்தைகளோடு இருந்துவிட்டு வரலாம்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

ஜெயலலிதாவைத் தலைவராக ஏற்றுக்கொண்ட சத்யபாமா, அவரைப் போலவே சோதனைகளைச் சாதனைகளாக மாற்றும் இரும்புப் பெண்மணியாக உருவெடுத்திருப்பது பெண் அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கையூட்டும் செயல்.

Leave a Response