ஸ்டாலின் ஆளுநர் திடீர் சந்திப்பு – தமிழக ஆட்சியில் மாற்றமா?

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,மற்றும் துரைமுருகன் ஆகியோர் மார்ச் 27,2018 அன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைத் திடீரென சந்தித்தனர். ஆளுநர் அழைப்பை ஏற்று, ராஜ்பவனில் இந்தச் சந்திப்பு நடந்தது.

ஆளுநர் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி விவரம்:

நேற்று ராஜ்பவனில் இருந்து திடீரென ஒரு அழைப்பு வந்தது. “இன்று 6 மணியளவில் ஆளுநர் தங்களை சந்திக்க விரும்புகிறார்”, என்று தெரிவித்தனர். ஆனால், எதற்கு அழைக்கிறார், என்ன காரணத்துக்காகச் சந்திக்க விரும்புகிறார் என்ற விவரங்கள் எங்களுக்குச் சொல்லப்படவில்லை. இருந்தாலும், ஆளுநர் அழைத்திருக்கிறார் என்றால், ஏதேனும் முக்கிய விஷயம் இருக்கும் என்று கருதி நானும், திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகனும் ஆளுநரைச் சந்தித்தோம்.

சட்டப் பல்கலைக்கழகத்தில் சாஸ்திரி என்பவரை துணைவேந்தராக நியமனம் செய்தது தவறு என்று எல்லாக் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதேபோல, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் கண்டன அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அதுமட்டுமல்ல, இந்த நியமனம் தவறு என்று தனிப்பட்ட முறையில் ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

இன்று அதுகுறித்து விளக்கம் அளித்தார். “சட்டப் பல்கலைக்கழகத்துக்கு நியமிக்க வேண்டிய துணைவேந்தர் பணிக்கு பாலு, டேவிட். சாஸ்திரி ஆகிய 3 பேர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர், அதனடிப்படையில் சாஸ்திரியைத் தேர்வு செய்து நியமனம் செய்யப்பட்டதே தவிர, அதில் எந்தத் தவறும் இல்லை”, என்று எங்களிடத்தில் வாதிட்டார். அவரிடம், “நீங்கள் நியமித்துள்ள சாஸ்திரி மீது ஏற்கெனவே பல புகார்கள் உள்ளன. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதே”, என்று நான் கேட்டேன்.

“அது இருந்தது உண்மைதான். ஆனால், ஒழுங்கு நடவடிக்கை குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு, அவர் எந்தவிதத் தவறும் செய்யவில்லை என்று விசாரணையில் தெரிய வந்த பிறகுதான், அவரை நான் நியமித்திருக்கிறேன். எனவே, இதுகுறித்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே உங்களை அழைத்தேன்”, என்று எங்களிடம் அவர் தெரிவித்தார்.

அதனையடுத்து, நாங்கள், “மாநில சுயாட்சிக்குக் குந்தகம் விளைவிக்கின்ற வகையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்டு இருக்கின்ற நீங்கள், தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி இருக்கின்றபோது, அது நிலையான ஆட்சியா, நிலையில்லாத ஆட்சியா, அது எதுவாக இருந்தாலும், யாருடைய ஆட்சியாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் அல்லது திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, ஒரு ஆட்சி பொறுப்பில் இருக்கின்ற நேரத்தில், நீங்கள் தனியாக எப்படி ஆய்வு செய்யலாம்? ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்துவது முறையா? அதனால் தான் நீங்கள் எங்கெல்லாம் ஆய்வு செய்ய செல்கிறீர்களோ, அங்கெல்லாம் திமுக சார்பில், எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி காட்டுகிறோம்”, என்று ஆளுநரிடம் தெரிவித்தோம்.

உடனே அவர், “நான் ஆய்வுப் பணியை மேற்கொள்ளவில்லை, தமிழகத்தின் ஆளுநர் என்ற காரணத்தால், மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, சாதாரணமாக தமிழகத்தின் பல பகுதிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறேன்”, என்று சமாதானப்படுத்தும் வகையில் தெரிவித்தார். ஆனால், நாங்கள் அதனை ஏற்கவில்லை. எனவே நாங்கள், “ஒன்று தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறவில்லை என்று சொல்லிவிட்டு நீங்கள் சென்று ஆய்வு செய்தால் நாங்கள் அதில் குறுக்கிட மாட்டோம்.

ஆனால், ஒரு ஆட்சி நடைபெறுகின்றபோது நீங்கள் எப்படி செல்லலாம்? அது முறையற்றது. மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது. மாநில சுயாட்சி என்பது அண்ணாவின் கனவு. திமுக தலைவர் கருணாநிதி அதற்காக எத்தனையோ தீர்மானங்களை சட்டப்பேரவையில் கொண்டு வந்து, ஏகமனதாக நிறைவேற்றியும் கொடுத்திருக்கிறார்.

எனவே, இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் எப்படி ஆய்வு செய்ய செல்லலாம்?”, என்று அழுத்தமாக கேட்டோம். இதற்கு பதிலளித்த அவர், “நீங்கள் சொன்னதை நான் யோசிக்கிறேன். பரிசீலித்து முடிவெடுக்கிறேன்”, என்று அவர் மனம் திறந்து சொல்லியிருக்கிறார். ஆளுநர் அவர்களுடன் இன்று நடந்த சந்திப்பில் இதுதான் நடைபெற்றது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில்கள்….

சட்டப் பல்கலை துணைவேந்தர் நியமனத்தில், சாஸ்திரி மீது தவறில்லை என்று கவர்னர் கொடுத்துள்ள விளக்கம் உங்களுக்கு திருப்தியானதா?

ஆளுநர் அதற்கான ஆதாரங்களாக சில கோப்புகளை எல்லாம் எடுத்துக்காட்டினார். விசாரணைக் குழு எப்படி அமைக்கப்பட்டு இருக்கிறது, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை மீது ஏற்கெனவே நடைபெற்ற விசாரணைகள் குறித்து சொல்லியிருக்கிறார். எனவே, அவர் சொன்னதை நாங்கள் கேட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து நாங்கள் மீண்டும் பரிசீலனை செய்வோம்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவரை நேரில் அழைத்து தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆளுநர் விளக்கம் அளித்திருக்கிறாரே?

அது பாராட்டுக்குரிய ஒன்றாக இருக்கிறது. இந்த சந்திப்பில், மாநில சுயாட்சி குறித்து நாங்கள் எந்தளவுக்கு அழுத்தம் கொடுத்து பேச முடியுமோ, அந்தளவுக்கு அவரிடம் பேசியிருக்கிறோம்.

ஆளுநர், தொடர்ந்து ஆய்வு செய்தால் திமுகவின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

ஆளுநர் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்று ஆளுநர் தரப்பிலிருந்தோ அல்லது அரசு தரப்பில் இருந்தோ அதிகாரபூர்வமாக தெரிவிக்க வேண்டும். அப்படி அறிவிப்பு வந்தபிறகு அதுபற்றி நாங்கள் முடிவு செய்வோம்.

நியூட்ரினோ விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் கூறியது போல அரசு செயல்படுமா?

நியூட்ரினோ விவகாரத்தில் மக்களுடைய நிலைகளையும், சூழல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் எந்தளவுக்கு பாதிக்கப்படும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எனவே தான், அதனை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறதே?

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே இதுகுறித்து நான் தெளிவாக கூறியிருக்கிறேன். ஆனால், மத்திய அரசு எப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தி, ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதோ அதேபோல், தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சியும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். முதன்முதலில், அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டுமென்று நாங்கள் தான் வலியுறுத்தினோம்.

அப்படி கூட்டியபோதே, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று தெரிவித்தோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. பிரதமர் சந்திக்கவில்லை என்ற நிலை வந்ததும், சட்டப்பேரவையைக் கூட்டுங்கள் என்று சொன்னோம். எனவே, வேறு வழியில்லாமல் கூட்டினார்கள். அந்தக் கூட்டத்தில், எம்.பி.க்கள் மட்டுமல்ல, அதிமுகவின் எம்.எல்.ஏ.க்களும், அவர்களைத் தொடர்ந்து எங்களைப் போன்ற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் கூண்டோடு ராஜினாமா செய்து அழுத்தம் தர வேண்டும் என்று பேசினேன்.

அதையும் அவர்கள் செய்யவில்லை. அதன்பிறகு, 4 வாரம் இருக்கிறது, 3 வாரம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே வந்து, 29 ஆம் தேதி வரை பொறுப்போம் என்று துணை முதல்வர் தெரிவித்தார். அப்போது கூட நான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கேட்டேன். இப்போது, நாளை ஒருநாள் தான் இடையில் இருக்கிறது என்ற சூழ்நிலையில் அனைவரையும் ஏமாற்றுவதற்காக, அவமதிப்பு வழக்கு தொடர்வதாக சொல்கிறார்கள்.

காவிரி விவகாரம் குறித்து கவர்னரிடம் நீங்கள் வலியுறுத்தி இருக்கிறீர்களா?

அவருக்கு இதில் எந்த அதிகாரமும் கிடையாது என்பதால் காவிரி விவகாரம் குறித்து அவரிடம் எதுவும் பேசவில்லை. மாநில சுயாட்சியின் அடிப்படையில் அவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தி விட்டு வந்திருக்கிறோம். எதிர்வரும் 30-ம் தேதியன்று திமுகவின் செயற்குழு கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் பேட்டி மூலம், இது மிகவும் ஆரோக்கியமான சந்திப்பு என்று தெரிகிறது. ஆனாலும் தமிழகத்தில் பெரும்பான்மை பலமில்லாத ஆட்சி இருக்கும் நிலையில் இப்படி ஒரு அதிகாரப்பூர்வமான சந்திப்பு நடந்திருப்பதால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும் வாய்ப்பு இருக்கலாம் என்று சில அரசியல்பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Response