தமிழை அவமதித்த மடாதிபதி மன்னிப்பு கேட்க கெடு விதித்த கி.வீரமணி – பரபரப்பு அதிகரிப்பு

தமிழை அவமதித்த காஞ்சி சங்கராச்சாரியார் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் மன்னிப்புக் கோராவிட்டால், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு சங்கர மடங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நூல் வெளியீட்டு விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது (23.1.2018). அவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், காஞ்சி இளைய சங்கராச்சாரியார் திரு.விஜயேந்திர சரஸ்வதியும் பங்கு கொண்டனர்.

ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சி

ஆளுநர் பங்கேற்ற காரணத்தால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனைப் பேர்களும், பார்வையாளர்களும் உள்பட எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வழக்கமான முறையில் மரியாதை செலுத்தினர் – ஒரே ஒருவரைத் தவிர – அவர் வேறு யாருமில்லை – காஞ்சிபுரம் ஜூனியர் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதிதான்!
இது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. ஆளுநர் பங்குகொண்ட ஒரு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது அதனை அவமதிக்க நாட்டில் யாருக்குமே உரிமை கிடையாது.

தியானம் என்பது ஒரு வழிப்பாதையா?

சங்கராச்சாரியார் அந்த நேரத்தில் தியானத்தில் இருந்ததால் எழுந்து நிற்கவில்லை என்று சமாதானம் கூறப்பட்டது. அப்படியானால் தேசிய கீதம் பாடப்பட்ட பொழுது அதே சங்கராச்சாரியார் எழுந்து நின்றது ஏன்? என்ற நியாயமான கேள்வி எழுந்து நிற்கிறது. அந்த நேரத்தில் தியானம் கலைந்து விட்டதா என்ற கேள்வியும் இயல்பானதே!

சங்கரமடத்தின் விளக்கம் சரியா?

தமிழ்மொழியை சங்கராச்சாரியார் அவமதித்து விட்டார் என்ற கோபம் கொந்தளித்து நின்ற நேரத்தில் காஞ்சி சங்கர மடத்திலிருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான செய்தி அறிக்கையில், “தமிழ்த்தாய் வாழ்த்துக்கெல்லாம் எழுந்து நிற்பது, சங்கர மடத்தின் சம்பிரதாயம் இல்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்ததானது – எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததாகி விட்டது. அதே நேரத்தில் சரஸ்வதி வந்தனா பாடியிருந்தால் இதே சங்கராச்சாரியார் இப்படி நடந்து கொள்வாரா?

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும் பொழுது எழுந்து நிற்க வேண்டும் என்று ஏதாவது விதிமுறை இருக்கிறதா என்று சங்கர மடப் பக்தர் என்ற போர்வையில் ஒரு பிஜேபி காரர் தொலைக்காட்சி விவாதத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியது தான் வேடிக்கை – விபரீதம்!

அரசு ஆணை என்ன சொல்லுகிறது?

தமிழ்த்தாய் வாழ்த்துப் பற்றிய அரசு ஆணையில் பிரேயர் சாங் (PRAYER SONG) என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரேயர் என்ற ஆங்கில சொல்லுக்கு கடவுள் வணக்கம், பிரார்த்தனை என்றுதான் அகராதிகளிலும் கூறப்பட்டுள்ளது.
அப்படியிருக்கும் பொழுது அந்த விளக்கமும் இதற்குப் பொருந்துவதில்லை.

தமிழை நீஷப் பாஷை என்றும், சமஸ்கிருதத்தை தேவபாஷை என்றும் கருதுவது சங்கர மடத்தின் வாழையடி வாழை மனப்போக்காகும். அந்தத் துவேஷம் தான் இங்கு பிரதிபலித்துள்ளது.

10 கோடி மக்கள் பேசும் தமிழை அவமதிப்பதா?

உலகில் 10 கோடி மக்களுக்கு மேல் பேசப்படும் செம்மொழியான தமிழை ஒரு பொது இடத்திலேயே ஆளுநர் முன்னிலையில் அவமதித்தது என்பது மிகப் பெரிய குற்றமாகும். தமிழ்த்தாய் வாழ்த்துக்காக எழுந்து நின்ற அனைவரையும் கூட அவமதித்ததும் ஆகும்.

பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் மன்னிப்புக் கோராவிட்டால் சங்கர மடங்கள் முன் ஆர்ப்பாட்டம்!

இந்த நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி பிப்ரவரி மூன்றாம் தேதிக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும். இது ஒட்டு மொத்தமான தமிழர்களின் ஒருமனதான கருத்து என்பதில் அய்யமில்லை.

அப்படி தவறும்பட்சத்தில் ஒத்த கருத்துள்ளவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, காஞ்சிபுரம், சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய சங்கர மடங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கின்றோம்.
– கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.

Leave a Response