ராஜபுத்திரர் நல்லவர், முஸ்லிம் கெட்டவர், பிராமணர் கேடுகெட்டவர் – பத்மாவத் விமர்சனம்

ராஜபுத்திர அரசன் ரத்தன்சிங் மனைவி இருக்கும்போதே சிங்கள இளவரசியைக் காதலித்துக் கல்யாணம் செய்கிறார். அவர் கல்யாணம் செய்த பெண் மீது தில்லி சுல்தானுக்கு ஆசை. இதனால் இரண்டு நாடுகளுக்கிடையே போர். போரில் வென்றது யார்? என்ன நடந்தது? என்பதே படம்.

ரத்தன்சிங்காக ஷாகித்கபூர், சிங்கள இளவரசி பத்மாவதியாக தீபிகாபடுகோன், தில்லி சுல்தானாக ரன்வீர்சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.கரை புரண்டோடுதே கனா என்கிற பாடலுக்கு ரன்வீரின் நடனம் வெகு சிறப்பு.

தீபிகா படுகோனுக்கும் ரன்வீர்சிங்குக்கும் நடிப்பில் கடும் போட்டி. இருவரும் ஒருவரையொருவர் மிஞ்சுகிறார்கள்.

ஷாகித்கபூர், ரன்வீர்சிங்கின் மனைவியாக வருகிற அதிதிராவ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கொடுத்த வேடங்களுக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

தன் மனைவி மீது தில்லிசுல்தானுக்கு ஆசை என்று தெரிந்தும் வாளை வீசாமல் வாழாவிருப்பதும் எதிரி எந்த ஒழுங்குமுறைக்கும் கட்டுப்படாதவன் என்று தெரிந்தும் தனியே யுத்தத்துக்குப் போய் மரணமடையும் ஷாகித்கபூர் கதாபாத்திரத்தின் மூலம், நீங்கள் நல்லவராகவோ மூத்தோர் வகுத்த ஒழுக்க நெறிமுறைகளைப் பின்பற்றுகிறவராகவோ இருந்தால் நன்றாக வாழமுடியாது என்று இந்தக்கதை சொல்கிறது.

திருமண நிச்சயத்தின் போதே இன்னொரு பெண்ணுடன் உறவு, மாமனாரைக் கொலை செய்து ஆட்சிக்கட்டில், அடுத்தவன் மனைவி மீது ஆசை
என்று எவ்வளவு தப்புகள் செய்தாலும் வலிமை இருந்தால் பிழைக்கலாம் என்று ரன்வீர்சிங் கதாபாத்திரம் மூலம் இக்கதை சொல்கிறது.

ராஜபுத்திரர் நல்லவர் முஸ்லிம் கெட்டவர் என்று சொல்லும் இந்தக் கதையில் இன்னொரு முக்கிய அம்சம். பிராமணர்கள் கேடுகெட்டவர்கள் என்று சொல்லப்பட்டிருப்பது.

ஒரு தேசத்துக்கே ராஜகுருவாக விளங்கினாலும் அரசன் அரசி ஆகிரோரின் முதலிரவு அறையை எட்டிப்பார்க்கும் ஒரு பிராமணரால்தான் இக்கதை நகர்கிறது. அந்த ஒற்றைமனிதன் செய்யும் சூழ்ச்சியே பெரும்போர்களுக்குக் காரணமாகிறது. இப்ப்டி ஒரு கதையைப் படமாக்க இயக்குநர் சஞ்சய்லீலாபன்சாலிக்கு எப்படித் துணிவு வந்தது?

தீபிகாபடுகோன்,ரன்வீர்சிங் ஆகியோரின் நடிப்பு பிரமாண்ட காட்சியமைப்புகள் ஆகியனவற்றுக்காக ஒருமுறை பார்க்கக்கூடிய படமாக இருக்கிறது.

– அன்பன்

Leave a Response