வைரமுத்து மீதான சர்ச்சைக்கு உண்மையான காரணம் இதுதான் – அதிரவைக்கும் புதிய செய்தி

எல்லா விருதுகளும் ஒன்றுபோல் வழங்கப்படுவதில்லை. அதிலும் சாகித்ய விருதுகள், ஞானபீட விருதுகள், பத்மவிருதுகள் போன்றன வழங்கப்படுவதில் சில முறைமைகள் உள்ளன. பேரளவு எண்ணிக்கையிலிருந்து சிற்றெண்களாக ஆக்கப்பட்டு ஒருவர் பெயர் அறிவிக்கப்படும். ஆயிரங்களிலிருந்து நூறு; நூறிலிருந்து பத்து; பத்திலிருந்து மூன்று; மூன்றிலிருந்து ஒன்று என இசைநாற்காலி முறைமை அது.

பெயர் அறிவிக்கப்படும் முன்பு தேர்வுக்குழுவில் விவாதங்கள்கூட நடக்கும். விவாதங்கள் எப்படி நடக்கும் என்பதற்குக் குழுவில் இடம்பெறும் வல்லுநர்கள் தான் பொறுப்பு. குழுவில் இடம்பெற்றதே பெரும்பாக்கியம் என நினைப்பவர்கள் விவாதிப்பதில்லை. ஒருங்கிணைப்பாளர் சொல்லும் பெயருக்கு ஒத்துப்போய்க் கையொப்பமிட்டுவிடுவார். ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாக அறிவிப்புச்செய்ய அரசு அமைப்புகள் விரும்பும்.

தமிழுக்கு ஞானபீட விருது என்பதை முடிவுசெய்துவிட்டு ஆளைத்தேடும்போது தனது பெயர் பரிசீலனை செய்யப்படும் வாய்ப்பைக் கவி வைரமுத்து உருவாக்கிவிட்டார் என ரகசியச் செய்திகள் கசிந்த நிலையில், அதனைத் தடுக்கும் பெருங்கல்லாக ஆண்டாள் உருண்டுவந்து நிற்கிறாள். பிராமணர்கள் ஆதிக்கம் – மையத்திலும் மாநிலத்திலும் – ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்தில் பிராமணரல்லாத ஒருவர் அதைப் பெறுவது தங்களின் ஆதிக்கத்திற்கு -செல்வாக்குக்குப் பெரும் வீழ்ச்சி எனக் கருத்தியல்வாதிகள் நினைத்திருக்கக்கூடும். இலக்கியம் பற்றிய கருத்தியல்களை முன்வைத்து விவாதித்துத் தடுக்க இயலாத நிலையில் ஆண்டாளை உருட்டிவிட்டுள்ளனர் என்றே தோன்றுகிறது.

உயரிய அறங்களை உருவாக்கி உலகத்திற்கு வழங்கியதாகப் பெருமைகொள்ளும் பிராமணியமே அதிகாரத்தைக் கைப்பற்ற எல்லா அறங்களையும் கைவிடுவதும் அதன் செயல்நிலை. பிராமணியத்தின் நகர்வு -வரலாறு இதனைக் காட்டியிருக்கிறது. அதிலும் அதிகாரத்திற்காகத் தங்கள் பெண்களைப் பலிகொடுக்கத் தயங்காதது பிராமணியம் என்பதும் கடந்தகாலம்தான்.

வில்லிபுத்தூரில் விட்டுவிடுதலையான யுவதியாக – மார்கழிக்குளிரின் இதமான காலையில் பாடித்திரிந்த அந்தப் பெண்ணை திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக்கிப் பலிகொடுத்தவர்கள் திரும்பவும் ஒருமுறை பலிகொடுக்கிறார்கள்.

– அ. ராமசாமி
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

Leave a Response