இன்குலாப் குடும்பம் சாகித்ய அகாடமி விருதை மறுக்க ஜெயமோகன் காரணமா?

மக்கள்பாவலர் இன்குலாபுக்கு 2017 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் அதுபற்றி மிக வன்மத்துடன் பேசியிருந்தார்
திரைப்பட வசனகர்த்தா ஜெயமோகன். அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் இதழாளர் கவின்மலர் எழுதியுள்ள பதிவு…

”காலமெல்லாம் இந்திய அரசெதிர்ப்பாளராக பாவனைசெய்தவருக்கு அளிக்கப்படும் சாகித்ய அக்காதமி ஒருவகையில் அவர் ஒங்கிக்கூச்சலிட்ட அனைத்து புரட்சிகளையுமே காலிசெய்வது என்பதை அவருக்காக உழைத்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அல்லது அவர்கள்தான் சரியாகப்புரிந்துகொண்டிருக்கிறார்களோ? அவர் ஏங்கியதே இதைத்தானோ?” – ஜெயமோகன்

இன்குலாப் எழுதியது இலக்கியத்தில் வருமா வராதா என்கிற ஆராய்ச்சியை ஜெமோ செய்யலாம். அது கவிதை இல்லை என்று சொல்லலாம். விமர்சிக்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது போல அவருக்கும் உண்டு. ஆனால் மேற்கண்ட வாக்கியங்கள் எல்லாம் ஆணவத்தின் உச்சம். பாவனை செய்தார் என்பதற்கு என்ன சான்று? இவருக்கு எப்படித் தெரியும்? அவர் சாகித்ய அகாடமிக்கு ஏங்கினார் என்று எழுதுவது அவரை கொச்சைப்படுத்தும் செயல்.

இன்குலாப் குறித்து என்ன தெரியுமென்று இவர் அவரைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்? இது கிசுகிசு பாணியிலான அப்பட்டமான அவதூறு. எழுத்தாளர்கள் அவதூறு எழுதும் அளவுக்கு தரந்தாழ்ந்து போவதை கண்கொண்டு பார்க்கும் காலமிது.

அப்புறம் ‘அவருடைய குடும்பம் இப்போது விருதை மறுத்திருக்கிறது. அதற்கு உங்கள் கடுமையான விமர்சனமும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்’ என அவருடைய வாசகர் ஒருவர் இவருக்குக் கடிதம் எழுதினாராம். அதற்கு அவர்
’என் விமர்சனம் காரணமாக இருந்தால் நன்றி.’ என்கிறார்.

விருது அறிவிப்பு செய்த உடனேயே அவரது குடும்பத்தினரோடு பேசியபோது அதை ஏற்பதாக இல்லை என்றும் அதிகாரபூர்வமாக கடிதத்தை சாகித்ய அகாடமிக்கு அனுப்பியபின் அறிவிப்பதாகவும் சொன்னார்கள். சில மணிநேர இடைவெளியில் மறுப்பு செய்தி வந்ததற்கு அந்த அறிக்கையை தயார் செய்ய எடுத்துக்கொண்ட நேரமும் அதை சாகித்ய அகாடமிக்கு அனுப்பிய பின் அறிவிக்கவேண்டும் என்கிற நோக்கமும்தான் காரணம்.
ஆனால் ஏதோ இவர் எழுதிய விமர்சனத்தைப் படித்துவிட்டுத்தான் குடும்பத்தினர் இப்படியொரு முடிவு எடுத்ததார்கள் என்பது போல நன்றி எல்லாம் சொல்வதை எந்தக் கணக்கில் வைப்பது?

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response