பூவுலகின்நண்பர்கள் கோரிக்கையை ஏற்று உடனே செயல்பட்ட ஸ்டாலின்

கூடங்குளம் அணு உலையில் தொடர்ந்து பழுது ஏற்பட்டுவரும் அலகுகள் 1&2 குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள அரசு சாரா விஞ்ஞானிகள், அறிவியல் நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்கிற தி.மு.க. வின் கோரிக்கையை வரவேற்கிறோம் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

கூடங்குளம் அணு உலைகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் பழுதுகள் குறித்த சுயாதீனமான குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் 14ஆம் தேதி தி.மு.க. செயல் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தோம். இதை தொடர்ந்து தி.மு.க. செயல் தலைவர், பிரதமர் அலுவலகத்திலுள்ள இணை அமைச்சர் திரு.ஜிதேந்திர சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தை அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.திருச்சி சிவா மற்றும் திரு டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் அடங்கிய குழு இன்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அளித்தது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கோரிக்கைகள்:

1. தொடர்ச்சியாக பழுது ஏற்பட்டுவரும் அலகுகள் குறித்த சுயாதீனமான விசாரணை வேண்டும்

2. உச்சநீதி மன்ற வாழிகாட்டுதலின் படி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.

3. முதல் இரண்டு உலைகளே பழுதடைந்து உள்ள நிலையில் மேலும் இரண்டு உலைகளை நிறுவ அரசு முயற்சிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

4. இந்த நேரத்தில், குஜராத்தில் மக்கள் போராட்டங்கள் நடத்தினால் அணு உலைகள் ஆந்திர மாநிலத்திற்கு மாற்றப்படுகின்றன ஆனால் தமிழகத்திற்கு மேலும் பல உலைகளை நிறுவ இந்திய அரசு முயற்சிப்பது புரிந்துகொள்ளமுடியாதாக உள்ளது.

5. உச்சநீதி மன்ற உத்தரவின் பேரில் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டிருக்கவேண்டும், ஆனால் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால், மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்

6. சுதந்திரமான குழுவை கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் வரை 3&4 உலைகளைகளுக்குரிய பணிகளை உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
தி.மு.க வின் கோரிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் தி.மு.க எடுத்துள்ள நிலைப்பாடு நிச்சயம் அணுசக்திக்கு எதிரான கொள்கையை முன்னெடுக்க வழிவகுக்கும் என்றும் நம்புகிறோம்.

தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளும் அணுசக்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் வகையில் தொடர்ச்சியான உரையாடல்களை மேற்கொள்வோம் .- பூவுலகின் நண்பர்கள்

Leave a Response