அன்புச்செழியனைப் பாதுகாக்கும் உத்தமர் – ஓபிஎஸ்ஸை வெளுக்கும் இராமதாசு

தமிழ்த் திரையுலகை கந்துவட்டி என்ற வில்லனின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். அசோக்குமாரின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தரவும், அவரது கடந்த கால அட்டகாசங்கள் குறித்து விசாரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

திரைப்படத் தயாரிப்புக்காக கந்துவட்டிக்கு கடன் கொடுத்த அன்புச் செழியன் என்ற கந்துவட்டிக்காரர் அவமானப்படுத்தியதால், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அசோக் குமார் என்ற தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பார்ப்பதற்கு பிரகாசமாக தெரியும் திரையுலகில் நடைபெறும் அதிர்ச்சிகரமான இருட்டு நிகழ்வுகளுக்கு இது ஒரு உதாரணமாகும்.

தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த வில்லன் கந்துவட்டியும், கந்துவட்டிக்கு கடன் தருபவர்களும் தான். திரையுலகில் கதாநாயகனாக இருப்பவர்கள் கூட இந்த வில்லனிடம் கைக்கட்டித் தான் நின்றாக வேண்டும். இதற்கு முன் கடந்த 2003-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் கொடி கட்டி பறந்த ஜி.வி என்ற தயாரிப்பாளர் கந்துவட்டிக்கு வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததற்காக இழைக்கப்பட்ட அவமானங்களை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அவரைப் போலவே இப்போது அசோக் குமாரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த இரு நிகழ்வுகளுக்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருக்கும். ஆனால், அவர்கள் அவ்வளவு பிரபலமானவர்கள் இல்லை என்பதால் அதுகுறித்த விவரங்கள் வெளிவரவில்லை. தயாரிப்பாளர்கள் ஜி.வி., அசோக்குமார் ஆகிய இருவரின் தற்கொலைகளுக்கும் மூல காரணமாக இருந்தவர் அன்புச் செழியன் தான் என்று கூறப்படுகிறது.

ஆனாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஜி.வி தற்கொலைக்காக அவர் மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அன்புச்செழியனின் கொடுமையால் ஏராளமான தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் தாநாயகர்கள் அவமதிப்புக்கும், தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கின்றனர். மதுரையில் ஒரு தயாரிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டாலும் கூட அவருக்கு எதிரான வழக்கு வலுவிழக்கச் செய்யப்பட்டு விட்டது.

இத்தனைக்கும் காரணம் இரு திராவிடக் கட்சிகளையும் சேர்ந்த முக்கியப் புள்ளிகளின் கருப்புப் பணத்தை திரையுலகில் முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டித் தரும் பணியை அவர் செய்து வந்தது தான் எனக் கூறப்படுகிறது. இப்போது கூட அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அன்புச் செழியன் மீது மிகவும் சாதாரணப் பிரிவில் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணம் கந்துவட்டி தான் என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தெரிந்திருந்தாலும் அதற்கு காரணமானவர் மீது கந்துவட்டிச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

இத்தனைக்கும் காரணம் தமிழக அமைச்சராக இருக்கும் உத்தமர் ஒருவரின் தலையீடு தான் என்று கூறப்படுகிறது. தர்மயுத்தம் நடத்திய அந்த அமைச்சரின் வாரிசு மூலம் பலநூறு கோடி கருப்புப்பணம் திரையுலகில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அப்பணத்தை அன்புச்செழியன் தான் நிர்வகித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால் அசோக்குமார் தற்கொலை வழக்கிலும் அவர் மீது நடவடிக்கை பாயாது என்றே தெரிகிறது.

அதேநேரத்தில் கசப்பான இன்னொரு உண்மையையும் கூறித் தான் ஆக வேண்டும். திரைத்துறையினரின் சரியான திட்டமிடல் இல்லாமை, பிரபலங்களின் பின்னால் ஓடும் வழக்கம், ஓடும் குதிரை மீது பணம் கட்டும் சூதாட்ட குணம் போன்றவை தான் கந்துவட்டி எனப்படும் புதைகுழியில் தயாரிப்பாளர்கள் சிக்கிக் கொள்வதற்கு முக்கியக் காரணமாகும்.

தமிழ்த் திரையுலகச் சந்தையில் ஒரு திரைப்படம் எவ்வளவு தான் வெற்றிகரமாக ஓடினாலும் ரூ.100 கோடி வசூல் ஈட்ட வாய்ப்பில்லை என்பது நன்றாகத் தெரிந்தும், கதையை நம்பாமல், கதாநாயகனை மட்டும் நம்பி ரூ.200 கோடி, ரூ.300 கோடிக்கு படம் எடுப்பது எந்த வகையில் புத்திசாலித்தனமாக இருக்கும்.

இது விளக்கைத் தேடி விழுந்து அழியும் விட்டில் பூச்சியின் செயலுக்கு இணையானது தானே? அண்மைக்காலங்களில் மிகப்பெரிய முதலீட்டில் திரைப்படம் தயாரித்து, அது தோல்வியடைந்ததால் வாழ்நாள் முழுவதும் ஈட்டியதையெல்லாம் இழந்து, கடன் என்ற கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களை நான் அறிவேன்.

தமிழ்த் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளில் கதையை நம்பி ஓரிரு கோடி ரூபாய் முதலீட்டில், முகம் தெரியாத கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்ட ஏராளமான திரைப்படங்கள் பல மடங்கு லாபத்தைக் கொடுத்துள்ளன. திரைத்துறை என்பது ஒரு சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் முடிந்து விடுவதில்லை. அத்துறையை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அவர்களின் நலனுக்காக திரைத்துறை உயிர்ப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக அத்துறையை சூதாட்டமாக கருதாமல் தொழிலாகவும், வணிகமாகவும் நடத்த வேண்டும்.

திரைத்துறை தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு, அதற்கு வங்கிக் கடன் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் தயாரிக்க வங்கிகள் விதிக்கும் நிபந்தனைகளில் மிகவும் முக்கியமானது படத்தயாரிப்பு செலவுகளில் வெளிப்படைத் தன்மை தேவை என்பது தான். ஆனால், துரதிருஷ்டவசமாக பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வங்கிக்கடன் பெற முயலாமல் கந்துவட்டிக்கு கடன் வாங்கி கண்ணீரில் மிதக்கின்றனர்.

இந்த நிலையை மாற்றி திரைத்துறையினர் தங்களுக்குள் விவாதித்து திரைப்படத் தயாரிப்புச் செலவை குறைத்தல், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் தமிழ்த் திரையுலகை கந்துவட்டி என்ற வில்லனின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். அசோக்குமாரின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தரவும், அவரது கடந்த கால அட்டகாசங்கள் குறித்து விசாரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Response