‘தல-தளபதி’ என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி”. “வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர், பரபரப்பான கருத்தை பேசியுள்ளார்.
சினிமா வேறு, அரசியல் வேறு, வாழ்க்கை வேறு. எம்.ஜி.ஆர் காலத்தில் கலைஞரை கைது செய்த போது, கண்டித்து ஒரு பக்க அளவிற்கு பத்திரிக்கையில் கண்டனம் செய்தவன் நான். நான் எந்த கட்சியையும் சாராதவனாக இருந்தாலும், கலைஞரை எனக்கு பிடிக்கும் என்கிற காரணம் தான் அது. ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் அவரது கம்பெனியில் படம் இயக்க என்னை ஒப்பந்தம் செய்தார். அப்படித்தான் அப்போதைய அரசியல்வாதிகள் இருந்தார்கள். அவர்கள் அரசியலையும் சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்தறிகிற ஆற்றலும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள்.
ஆனால், இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கெல்லாம் அந்த பக்குவமும், நம்பிக்கையும் இல்லை. எங்கே ஏதாவது ஒரு நடிகன் நாடாள வந்துவிடுவானோ? என்ற பயத்திலேயே இருக்கிறார்கள். அதனால் தான் இவர்களால் சினிமாவையும், அரசியலையும் வேறு வேறாக பிரித்தறிய முடியவில்லை.
இங்கு தேவையில்லாமல் ஜாதியையும், மதத்தையும் ஏன் திணிக்கிறீர்கள்? நாடாள்கிற ஒரு கட்சியின் முக்கியமான பதவியிலிருக்கும் ஒருவர் பொறுப்பில்லாமல் ஜாதி, மத அடிப்படையிலான கருத்துக்களை சொல்வது எவ்வளவு மோசமான செயல்?
இங்கிருக்கிற அரசியல்வாதிகள் எல்லாம் படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம் செய்யக் கிளம்பிவிடுகிறார்கள். படத்தில் எந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த வசனம் இடம்பெறுகிறது என்பதைக் குறித்து எந்த கவலையும் இல்லை. தயவுசெய்து மற்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழ் சினிமாவை வாழவிடுங்கள்” என ஒரு பிடிபிடித்தார்.