முதன்முறையாக களத்தில், சிபிஎம் கட்சியைப் பின்பற்றிய கமல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,அக்டோபர் 26,2017 வியாழக்கிழமை, எண்ணூரில் ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியை பார்வையிட்டார்.

அதன்பின், மழைக் காலங்களில் கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கின்றது. இந்தப் பகுதியில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நீர்பிடிப்பு உள்ள அலையாத்திக்காடு பகுதியில் மீன் குஞ்சுகள் பொறித்து பின் கடலுக்குள் செல்லும்.

இந்தப் பகுதியில் காமராஜர் துறைமுகத்தின் விரிவாக்கம் மற்றும் சிறிய தொழிற்சாலைகளின் ஆக்கிரமிப்பு, வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொட்டப்படும் சாம்பல் கழிவு மேடுகள் ஆகியவற்றால் ஆற்றில் இருந்து வரும் நீர் கடலுக்குள் செல்லமுடியாமல் திருவொற்றியூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட 52 பகுதிகளில் மழைநீர் வெள்ளம் புகுந்து பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு 8 ஆயிரம் ஏக்கரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முகத்துவாரம் பகுதியை ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும். ஆறு, கால்வாயில் இருந்து வரும் தண்ணீரை கடலில் கலக்கும்படி செய்து வடசென்னையை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அடுத்தநாள், அக்டோபர் 27,2017 வெள்ளிக்கிழமை, நடிகர் கமல், பதிவிட்டிருந்த ட்வீட்டில் “தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. முழவிவரம் கீழே” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் வெளியிட்டிருந்த முழு விவரத்தில், “கொசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாறைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம்.

வல்லூர் மின் நிலையமும், வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன. இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான்.

பற்றாக்குறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும், பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணை முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன. காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கோசஸ்தலையின் கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலையும் நடப்பதாக கேள்விப்படுகிறேன். நில வியாபாரிகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையையும் உதவியையும் ஏழை மக்களுக்கு கொடுக்காத எந்த அரசும் நல் ஆற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைகள் தான்.

வழக்கமாக வரும் மழை போனவருடம் போல் பெய்தாலே வடசென்னை வெள்ளக்காடாகும். வானிலை ஆராய்சியாளரின் எதிர்பார்ப்புப்படி இவ்வருடம் அதிகம் மழை வரும் பட்சத்தில் 10 லட்சம் வடசென்னை வாழ் மக்களுக்கு பெரும் பொருட்சேதமும் ஏன்? உயிர் சேதமும் கூட ஏற்படலாம் என்பது அறிஞர் அச்சம். 100 வாக்கி டாக்கிகளும், பல படகுகளும் இவ்வருடம் வெள்ளத்தில் தவிக்கப்போகும் மக்களை ஒரு வேலை கரையேற்றலாம்.

அவர்கள் வாழ்க்கையில் கரை ஏற நிரந்த தீர்வு காண்பதே நல்லரசுக்கு அடையாளம். இது நிகழ்து முடிந்த தவற்றி விமர்சனமல்ல. நிகழக் கூடிய ஆபத்திற்கான எச்சரிக்கை. அரசு விளம்பரப்படுத்தும் ஆபத்து உதவி எண்ணுக்கு கூப்பிடலாம். ஆபத்து வந்தபின் கூப்பிட்டுக் கதறாமல் முன்பே அரசையும் மக்களையும் எச்சரிக்கிறோம். மக்கள் செவிசாய்ப்பார்கள் என்று நம்புகிறோம். ஆனால், அரசு அது செவிசாய்க்காமல் மெல்லச்சாயும். அது விரைவுற நாமும் உதவலாமே!” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

கமல், சில வாரங்களுக்கு முன்பு கேரள முதல்வரைச் சந்தித்தார். இப்போது எண்ணூர் விசயத்தில் சிபிஎம் கட்சியைப் பின்பற்றியிருக்கிறார்.

கமல், பாஜகவின் மறைமுக ஆதரவாளர் என்கிற குற்றச்சாட்டு இருக்கும் வேளையில் அவர் வெளிப்படையாக சிபிஎம் கட்சியைப் பின்பற்றுகிறார்.

Leave a Response